நூல் வகை : நாவல்
தலைப்பு : யாருக்கோ கட்டிய வீடு
ஆசிரியர் : அமர்நாத்
முதல் பதிப்பு : 2019
பதிப்பு : சொல்லங்காடி, 10, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர்,
சென்னை. 600 011. அலைபேசி: 96770 53933.
பக்கங்கள் : 116
விலை : ரூ. 100/
நூல் வகை : நாவல்
தலைப்பு : யாருக்கோ கட்டிய வீடு
ஆசிரியர் : அமர்நாத்
முதல் பதிப்பு : 2019
பதிப்பு : சொல்லங்காடி, 10, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர்,
சென்னை. 600 011. அலைபேசி: 96770 53933.
பக்கங்கள் : 116
விலை : ரூ. 100/
லாவண்யா ரவி பெங்களூரு.
அமர்நாத் அவர்களின் யாருக்கோ கட்டிய வீடு நாவல் யதார்த்தத்தை அழகாக சாதாரண வார்த்தைகளில், சம்பவங்களில் எடுத்துக் காட்டுகிறது. யூ.எஸ் இல் நடக்கும் கதை என்றாலும் இது எல்லா மனிதனுக்கும் பொருந்தும் கருத்துகளை கூறும் நூலகவே அமைந்து இருக்கிறது. படிப்பு, ஆடை, வீடு, வாகனம் அவ்வளவு ஏன் குழந்தை பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு ஆகியவையும் மற்றவர்கள் நம்மை குறைவாக எண்ணி விட கூடாது என்ற ஒரே எண்ணத்தின் அடிப்படையிலேயே கையாள படுகிறது.
இதில் தன்னையே தொலைத்து, சராசர்க்குள் சிக்கி கொள்வோர் தான் பெரும் பகுதி. பாவம் அவர்களுக்கு நல்லதை எடுத்து கூற, இக்கதையின் சரவணப்ரியா போல ஆட்கள் கிடைப்பதில்லை. மாறாக எல்லாவற்றிற்கும் இன்னொருவரை எடுத்துகாட்டாக கூறி நீ இன்னும் முன்னேற வேண்டும் என்று அவரவர் வைத்திருக்கும் அளவு கோல்களை தினிகின்றனர். இக்கதையின் பொம்மி அதிர்ஷ்டசாலி. சராசரி வாழ்க்கை என்னும் பாதாளத்தில் விழபோகும் கடைசி அடியில் தானாகவே தப்பித்து தெளிவு பெற்றாள். பிள்ளைகள், கணவன், ஆசிரியை என அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக சித்தரிக்கபட்டிருக் கின்றன.
கதையின் ஆரம்பத்தில் உரையாடலில் யார் சரவண பிரியா யார் பொம்மி என சிறிய குழப்பம் எனக்கு உருவானது. ரெண்டு முறைகள் படித்து பார்த்த பின் விளங்கியது. நடு வயதினர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
ப.தி.ராஜேந்திரன், மாடம்பாக்கம், சென்னை.
யாருக்கோ கட்டிய வீட்டில் விருந்தாளியாக போயிருந்த நான் முடிவில் அங்கேயே குடியேறி விட்ட அலாதியான அனுபவத்தின் சேகரிப்பாக இந்த நாவல் எனக்குள் வந்து சேர்ந்தது. இவ்வளவு நாட்களாக இந்த நூல் என் கை சேரவில்லையே என்ற சஞ்சலத்திற்கு அகவிழி மூலமாக இதனை படிப்பதற்கான வழி வகுத்து கொடுத்தது என்பதற்காகவே பாராட்டுக்களும், நன்றியும் ….
ஏனெனில், ஒரு படைப்பாளன் தமது படைப்பின் வழியே எப்படியெல்லாம் சதுரங்கம் ஆட முடியும் என்பதற்கு இந்த நாவல் படைப்பு உலகில் குறிப்பிடத்தக்கதோர் பெஞ்ச் மார்க் எனலாம்.
நாவலாசிரியர் படைப்பின் கதைக்களத்தை நகர்த்திய பாங்கும், அதில் பிரவேசித்துள்ள சொல்லாடல்களும் மிகவும் அருமையாகவும், கச்சிதமாகவும் கோர்க்கப்பட்டுள்ளது.
சரிந்தும் வளைந்தும் செல்லும் உரைநடை உத்திகள் மட்டுமே அல்லாமலும், வாக்கியத்தின் வால் நீண்டு கதையை வதைக்காமலும், தொடர்ந்து நகரும் படிக்கட்டு நடையில் இந்த நாவலை முழுமையாக நகர்த்திச் சென்றிருப்பது போற்று தலுக்குரியது. நாவலின் கதைக்களம் வெளிநாட்டு வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு அமைந்திருக்கிறது. அதிலும் குழந்தை களை மையமாக வைத்து கதை புனையப்பட்டுள்து. கதை மாந்தர்களின் பெயர் தேர்வுகள் அழகாகவும், எளிமையாகவும் உள்ளன.
பல்லாங்குழி மாத்திரைகளை நிரப்பி தினம் தினம் சாப்பிடுறதில்ல எனும் வரிகளிலும், கவலை யில்லாத வாழ்க்கையின் பரிசு என்றும் ஆங்காங்கே கதைக்கு நடுவே வாழ்க்கைக்கு வரையரை வகுக்க முற்பட்டிருப்பது கதையை மேலும் மெரு கேற்றுவதாக அமைந்துள்ளது.
பார்வை அளவுகோளை பயன்படுத்தத் தெரிந்தவரே மௌன மொழி வித்தகராகி, அதற்கு எழுத்துரு தந்து விடுகிறார்கள். அந்த வகையில் தான் “பழுப்பு நிற ஆடைகள் அவளை இன்னும் கருப்பாக காட்டும் ” என்பதும் “முக்கோணத்தில் சேர்க்கத்தக்க முகம் ” என்றும் தன்வயப்பட்ட அழகியலை அப்படியே வாசகர்களுக்கு கடத்தியுள்ளார் நூலாசிரியர். முதுகை மறைத்த கூந்தல், அழகுக்கு இவை மட்டும் இல்லை, பேச்சிலும் நிதானம், பழகுவதிலும் இனிமை காரியங்களில் அக்கறை போன்ற வரிகளில், எது அழகு? எனும் கேள்விக்கு விடை கொடுத்திருப்பது சிறப்பு.
“செல்வத்தை டாலர் கணக்கில் அளக்கும் அவர்களுக்கு உடல்நலம் பற்றி என்ன தெரியும் ” என்பதில் செல்வம் என்பது பொருளாதாரத்தை மட்டுமே தாரமாக்கிக் கொண்டுள்ள உளவியலை சாடியிருப்பது அற்புதம்.
“ஒப்புக்கு அவளின் ஒப்புதலை கேட்கிறாள்” என்ற வரி மீண்டும் மீண்டும் அசை போடத் தக்க தாகவும், “நடக்காதது இல்ல ஆசை, நடக்கப் போவதில்லை அதைவிட அதிக ஆசை” என்பதும் வாழ்வியல் எதார்த்தத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
கூர்ந்து கவனித்தால், புள்ளிகளை சேர்த்து பார்த்திருந்தால் மாற்றம் கண்ணில் பட்டிருக்கும் என்ற அழுத்தமான வரிகள் அறியாமையை அப்புறப்படுத்துவதாக நிலைபெறுகிறது.
பொதுவாக விளையாட்டு என்பது பொழுது போக்கிற்கானது என்ற பார்வையல்லாமல் அதன் உள்ளுர உளவியல் விளைவுதனை “விளையாட்டு என்றால் போட்டி தானே?” என்று அப்பட்ட மாக்கியிருப்பது தனித்துவமானதாக உள்ளது.
நிறைய ஜன்னல்கள் திறந்த உணர்வைத் தரும்… போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் தொழிற்சாலை கல்விக்கூடங்கள்… போன்ற வரிகள் இளைய தலைமுறையை சீர்தூக்கிப் பார்த்து செதுக்கியது போல் அருமையாக அமைந்துள்ளது.
ஒரு மனிதனின் இயல்பை அவனது அடிப் படை குணங்களின் கட்டமைப்பு தீர்மானிக்கிறது. ஆனால் பெண்களில் கூடுதல் அலங்காரம் இல்லாமல், அதனோடு நளினம் பிண்ணிக் கொண்டால் அங்கே எப்போதும் வசீகரம் வளமடைந்து நிலைபெற்று விடுகிறது. அந்த வகையில் நூலாசிரியர் “சம்பிரதாய வார்த்தைகளில் கூட நளினமான உணர்ச்சி பொம்மியின் தனித்துவம் தொலைந்து போய்விடவில்லை” என்றுரைப்ப திலிருந்து அவர் அழகியல் உணர்வுகளை அங்குல அங்குலமாக அனுபவித்து நூலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது புலனாகிறது.
பிரச்சினைகளை திறந்து விரட்டுவதற்கான திறவு கோலை தேடி உலகெங்கும் தவம் செய்யும் பூதாகரமான விசயத்திற்கு மிகவும் எளிமையான தீர்வாக “பெரிய பிரச்சனைகளை தவிர்க்க சின்ன விஷயங்களில் விட்டுக்கொடுத்து இருந்தோம்” என்று விதைத்து விட்டுப் போகிறது இந்த நாவல்.
சராசரிக்கு உன்னை கண்டால் பிடிக்கல என்று மாறுபட்ட பார்வையையும் முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர்.
” உனக்கு எது சரித்திரமோ அது எனக்கு கனவு” என்ற வரிகள் உண்மையிலேயே ஒரு சரித்திர மனப் போக்கின் வெளிப்பாடு. இது போன்ற படைப்புகளை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற எனது கனவின் புறப்பாடாகவும், சிறந்த ஊக்கியாகவும் இந்த நாவல் இருக்கிறது. நாவலாசிரியர் அமர்நாத் அவர்கள் தொடர்ந்து படைப்புலகில் முத்தெடுத்து கடை விரிக்க எனது மனமார்ந்த அன்பும் வாழ்த்துகளும்…
வி. க. சீ. கோமதி
ஈரோடு
அகவிழி – இலக்கியச் சந்திப்பு : 20
நூல் விமர்சனம்: யாருக்கோ கட்டிய வீடு
ஆசிரியர்: அமர்நாத்
ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற மனநிலை பொதுவாக அனைத்து தரப்பு மக்களிடமும் உருவாகி வரும் இன்றைய சூழலில் இதுபோன்ற நாவல் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளும் வகையில் கருத்துகளை அறியும் வண்ணம் உள்ளது. வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் பணியாற்றும் மனநிலையில் இருந்து மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் சிக்கல்கள் உருவாக காரணமாக அமைந்தது எனலாம்.
குழந்தை பிறப்பு முதல் ஏதாவது ஒரு காரணம் கூறி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தலின் உள்நோக்கம் புரியாமல் அனைவரும் தங்கள் உழைப்பின் பயனாக கிடைக்கும் பொருளை வணிக நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு நிம்மதியின்றி வாழும் நிலை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பொருளீட்டும் பயணத்தின் போது ஏற்படும் பாதிப்பை பொருட்படுத்தாமல் திசை திருப்பும் வகையில் பேராசை ஏற்ப்பட்டு வருவதற்கு இந்த நாவலின் சண்முகப்பிரியா பொருத்தமான நபர். தன்னை சார்ந்தவர்களை காட்டிலும் பொருளாதார வளர்ச்சி அடைவதை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழ்ந்து குழந்தை பராமரிப்பு இல்லாமல் அதன் எதிர்காலமே கேள்விக் குறியாக உள்ளது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.
என்ன காரணத்திற்காக மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முயற்சி செய்தால் மட்டுமே நோயின் பிடியில் இருந்து விடுதலை பெற முடியும். கண்மூடித்தனமாக பரிந்துரை செய்யப்படும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் இல்லை என்பதை புரிந்து கொண்டு வாழ முடியும் என மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நிரந்தரமாக நோயின் பிடியில் இருந்து விடுபட்டு வாழும் நிலை ஏற்படும் மருத்துவ முறையில் வாழ முயற்சி செய்தால் மட்டுமே குணமாகும் என்று புரிதல் ஏற்பட்டு வருகிறது.
குழந்தைகள் சிறு வயது முதல் தொலைகாட்சி, கணிப்பொறி, வீடியோ கேம் அல்லது ஆன்லைன் விளையாட்டுகள் என்று ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வருவதால் சிந்தித்து செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்கா மற்றும் இயற்கை சார்ந்த சுற்றுலா செல்லும் போது மனதில் புத்துணர்வு கொடுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டுகளில் ஈடுபடுத்திக் கொண்டு வரும்போது விட்டு கொடுக்கும் தன்மையை வளர செய்ய முடியும். நண்பர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வது நல்லது. பெற்றோர் இருவரும் பணிக்கு சென்று பொருள் சேர்ப்பதற்கு முன்பு தன் குழந்தையை நல்ல மனநிலையில் வளர என்ன செய்ய முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து கண்காணித்து வளர்ப்பது நல்லது.
தனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்படும் வகையில் வணிக நிறுவனங்கள் விளம்பரங்களை செய்து வருகிறது. அதன் உள்நோக்கம் புரியாமல் வீட்டை வாங்கி விட வேண்டும் என்ற ஆசையில் வாங்கி வருகிறார்கள். தரம் குறைந்த கட்டுமான பொருட்களை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் காற்றோட்டம் இல்லாத வீடுகள் போன்ற காரணங்களால் சொந்த வீடு வாங்கிய பிறகு கூட வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பசிக்கும் போது உணவு உட்கொள்ளும் சூழ்நிலை இல்லாதவர்கள்கூட தனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்ற நோக்கத்தில் கடனை வாங்கி வீட்டை வாங்குகின்றனர். அதன்பிறகு அக்கடனை அடைப்பதற்காக பெரும் மன சிக்கல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். எந்த ஊரில் நிரந்தரமாக வசிக்க போகிறோம் என்ற தீர்வு எடுக்க முடியாமல் சிலர் பல இடங்களில் வீட்டை வாங்கி குவிக்கின்றனர். வீட்டுக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் ஒன்றுக்கு பல மடங்கான பணத்தை திருப்பி வசூல் செய்து வருகிறது. வணிக நோக்கம் கொண்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் மக்களின் மனதில் ஆசையை தூண்டி வருகின்றனர் என்பதை தெளிவாக இந்நூல் விளக்குகிறது.
கனவு அல்லது இலட்சியம் என்று எந்த பெயர் கூறினாலும் தனக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக ஆர்வம் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அடிப்படை வசதிகள் எது என்று அறிய உதவி செய்ய வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகாமல் வாழ்க்கை நடைமுறை குறித்து புரிதல் ஏற்படுத்தி கொடுப்பதில் பெற்றோர் கவனமும் ஈடுபாடும் காண்பித்து வர இதன் மூலம் குழந்தைகள் தவறான பாதையில் செல்வதை தவிர்க்கலாம்.
நம் பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறையில் வாழ முயற்சி செய்தால் மட்டுமே உடலிலும் மனதிலும் தெளிவு ஏற்படும். அறியாத நிலையில் எந்த பாதிப்புகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் விளைவு என்ன என்று புரிந்து கொண்டு மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்பட்டால் தன் இயல்பு நிலைக்கு மாற முடியும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. பிறருடைய வாழ்க்கை வசதிகளை கண்டு அது போல தானும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வதசிறப்பாக இருக்கும். அவசர அவசரமாக இயந்திர தனமாக வாழும் நிலையை உருவாக்கி பெருமிதம் கொள்வதை விட நிதானமாக தன்னிடம் உள்ளதை கொண்டு திட்டமிட்டு வாழ்வது நன்மை அளிக்கும் என்று புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய விதம் சிறப்பாக உள்ளது.