நூல் வகை : சிறுகதைகள்
தலைப்பு : சொல்லவே முடியாத கதைகளின் கதை
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
முதல் பதிப்பு : ஜனவரி 2011
பதிப்பு : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை. 600 018.
www.thamizhbooks.com
பக்கங்கள் : 128
விலை : ரூ.80/
பு.தீபக், சென்னை
இந்த நூலை படிக்க மிகவும் சிரமமாக இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தவுடன் தெரியவில்லை. முதல் கதையை படிக்க மிக கடினமாகவும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள மற்றும் வட சென்னை பாஷை போல இருந்ததால் கால நேரம் கடந்து கொண்டே போனது. இது
வரை படித்த எந்த புத்தகத்திலும் இந்த அளவு கண்கள் சோர்வு அடையவே இல்லை.
சில புதிய (புரியாத) வார்த்தைகள் – பொங்காரம், ஏகாலி, கிடக்கை, மசகிடாத, வாளிப்பின், மதர்ப்பை, ஆகிருதியை, போஷித்து, கட்டுக்கொடி, கிருந்ததியர்கள்.
ஒரு காலத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்று மனதில் நினைத்து படித்துக்கொண்டிருக்கும் பொது திடீரென்று தற்போதைய நிகழ்வுகளை நினைவு படுத்தும் விதமாக இருந்தது.
கருக்கலைப்பு செய்வதற்கு பெண்கள் கற்பூரத்தை வாழைப்பழத்தில் வைத்து முழுங்குவது நடை முறையில் அந்தகாலத்து மனிதர்கள் கடைப் பிடித்தனர் என்று யூகிக்க முடிந்தது.
ஜனாதிபதி எப்படி துப்புரவு பணியில் சேர்ந்தார் என்பதோடு எந்த நாட்டில் நடந்தது என்று ஆசிரியர் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்பது தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.
அ.பாலமுரளி, பூவிருந்தவல்லி
“இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை உங்களுக்கானதொரு சூரியன் பால்வெளியில் தகதகத்து வந்து கொண்டிருக்கிறது அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள் உங்களைத் தீண்டக் கூடும் தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள்! விகசிக்கும் அந்த ஒளி எடுத்துக் கண்களுக்குள் பாய்ச்சிக் கொள்வோம் நூறாண்டுகள் தடித்த இருட்சுவரை கடக்க வேண்டியவரன்றோ நாம்…”
‘இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை’ சிறுகதையில் ரஞ்சித்தை சூரியனாய் உருவகித்து நந்தினி எழுதிய இக்கவிதை வரிகள் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளுக்கும் பொருந்தும். ஆசிரியர் ஆதவன் தீட்சண்யாவின் இந்தக் கதைகளும் வெயிலை போன்றதுதான். யாவும் நமுத்து நைந்து ஈரத்தில் சொதசொதத்துக் கிடந்த சமூகத்திற்குள் சூடும் சொரணையும் பாய்ச்சுவது இவற்றின் திட்டம் என நான் கருதுகிறேன். தனது எள்ளல் இலக்கிய வகைமை மூலம், ‘கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்’ மற்றும் ‘லிபரல் பாளையத்து கட்டப்பஞ்சாயத்தார்க்கு காபா னோவா வழங்கிய தீர்ப்பு’ கதைகளை வாசிக்கும் பொழுது, புன்னகை நமது இதழில் பூத்தாலும் அதன் வலி நமது வேராழத்தில் ஊடுருவும். அனைத்து கதைகளின் வகைமையும் தன்மையும் வெவ்வேறாக இருந்தாலும் ஆசிரியரின் மார்க்சியப் பார்வை புலனாகிறது. ஒவ்வொரு கதையை மறுவாசிப்பு செய்யும் பொழுதும் அது வாசகனை இன்னும் உள்ளே இழுக்கின்றன.
உள்ளடக்க ரீதியாக இக்கதைகளை அணுகினால், மெஹருன்னிசா கதையின் இறுதியில் நந்தினிக்கு வாசிக்கும் அந்த முன்னுரையில்,கக்கா நாட்டின் நிலை பற்றிய வரிகளில், கங்காணியின் குடல் தள்ளிய குட்ட கடப்பாறையை கையில் வைத் திருக்கும் அலமேலு, கதைகதையாக தன் கதைகளை சொல்லும் பள்ளிகொடத்தாள், அவள் மகள், நாவிதனிடம் தன்னை பகிர்ந்து தலையை மழிக்காமல் வெளியே வந்த ஆனந்தி, ஒன்பது வருடம் கழித்து நான் ஒரு கொலைகாரன் என்ற தாரக்நாத், ஓரக்கழுத்தார்கள் போன்ற கதா பாத்திரங்களும், பெரும் கதையை தனது உள்ளே தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு கேமரா, இரு கடிதங்கள், ஒரு ஓவியம், போன்ற பொருட் களாலும், இவையாவும் வெறும் கதையாக இல்லாமல் ஒரு வாழ்க்கையாக உருமாறி வாசகனைத் தத்தளிக்க வைக்கின்றன.
சிறுகதைகளுக்கு என்றே அமைந்துள்ள வடி வத்தையும் கோட்பாட்டையும் இலக்கணங்களையும் மீறி, தனித்தன்மை வாய்ந்த வகைமைகளை ஆசிரியர் இங்கே உருவாக்கியிருக்கிறார்.
அவர் மொழி ஆளுமையை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும் பல இடங்களில் அவரது விவரணைகள் ஒரு கவிஞர் எழுதிய சிறுகதை யாகவே தெரிகிறது. உதாரணம், “செம்புழுதி படியும் கற்சாலையொன்றில் தளர்ந்து உருள்கிறது குதிரை வண்டி. யாருமற்று உளையும் அநாதைப் போல வண்டியின் அடிப்பாகத்தில் கருமையும் எண்ணெய்ப் பிசுக்கும் படிந்த லாந்தர் விளக்கு ஒன்று முன்னும் அள்ளையிலுமாய் அசைகிறது மெல்ல. இரவெல்லாம் எறிந்த களைப்பு அதில் படித்து விட்டதைப் போல் தோன்றுகிறது.”
“மழிபடும் கேசக்கற்றைகளின் கருமை சூழ்ந்த நீளும் கரைகளுக்கு இடையில் தேம்பியோடி கொண்டிருக்கிறது ஆறு.”
“பயனற்ற வார்த்தைகளாகி காற்றில் வீணே கரைகிறது ஓலம்.”
விழிபடலத்தின் மீது கருவிழி போல் சுழன்று கண்மூட விடாது உறுத்திக்கிடந்த பூமி உருண்டையை தூக்கி எறிந்த மாயத்தில் உறக்கம் என்ற பேரானந்த அமைதி தழுவிக்கொண்டது. தான் கண்டுபிடித்த கடிகாரத்திடம் இரவையும் பகலையும் ஒப்புக் கொடுத்துவிட்டு அந்த முள்ளின் நொடிப்பில் வாழப் பழகிவிட்ட மனிதன் இல்லை நீ தூங்கு மகனே தூங்கு என்றபடி தனது றெக்கையின் பொன்னிற இறகுகளால் வருடியபடியே கடலுக்கும் வானுக்கும் ஒய்யாரமாய் தாலாட்டினாள் தேவதை ஒருத்தி.”
“சுருக்கம் பாய்ந்த தன் நடுங்கும் கைகளை மெதுவே ஒரு கொடி போல் அசைத்து படுக்கை மீது இருந்த வெயிலை தடவிக் கொடுக்கிறாள்.”
கவித்துவமான வரிகள் மட்டுமல்லாமல் வட்டார வழக்கிலேயே இரு சிறுகதைகளை ஆசிரியர் இயற்றியுள்ளார். அதில் அவர் பதிவு செய்துள்ள பழ மொழிகளும் அந்த வட்டாரத்தில் ஆவணங்களாக விளங்குகின்றன.
“பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்யில் அரைவாசி ஆகாது”
“நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்கு பொழப்பு மாறல” “எவன் ஊட்டுல எழவு விழும் ஏ காலிக்கு துணி கிடைக்கும்”
“உள்ளூரில் ஒரல சுமந்து சம்பாதிக்கிறதுக்கு பக்கத்தூர்ல பஞ்ச தூக்கி சம்பாதிக்கலாம்”
“வலையில் விழாமல் மீன் எங்க போகும் தலைக்கு வராம பேன் எங்கு போகும்?”
இந்த வட்டார வழக்கை வாசிக்கும்போது எனக்கு இராசேந்திரசோழன் கதைகளும் நினைவுக்கு வந்தன.
ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் உருவாக்கும் கதைகளை பள்ளிகொடத்தாள் போலவும், அவளது பாட்டி போலவும், யாராவது கூற தயாராக இருந் தால், உறங்காமல் விடிய விடிய கடைசி வரைக்கும் கேட்கும் ஆடுகள் போல நாமும் கேட்டுக் கொண்டிருப்போம் என்பது திண்ணம்
மா.ஜெயசுஜா, திருச்சிராப்பள்ளி.
சொல்லவே முடியாத கதைகளின் உண்மைத் தன்மையை ஒவ்வொருவருக்கும் சொல்லி எழுதி யுரைத்துள்ளார் ஆசிரியர் அவர்கள்.
தனிமனிதன் சமுதாய அவலங்களை தெரிந்து கொள்வதன் அவசியத்தை இப்புத்தகம் வலியுறுத்து கிறது. “நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்குப் பொழப்பு மாறலேன்னு காலங்கழியுது. மீள்றதுக்கும் வழி தெரியல, மாள்றதுக்கும் குழி தெரியல.”
இந்நிலை சங்கிலித்தொடராக தொடர்கிறது. செய்யும் தொழிலில் ஆரம்பிக்கிறது உயர்வு தாழ்வு. தொழிலை தொழிலாகப் பார்க்கிற மனோபாவம் மக்களிடையே பரவ வேண்டும். உழைத்து ஒரு ரூபாய் சம்பாதிப்பவனும் மனிதன்தான். செய்யும் தொழிலில் உழைப்பில் (மனித ஆற்றலில், புத்தியில்) என்ன பாகுபாடு பார்க்கீறீர்கள். இப் புத்தகத்தை படிக்கும்போது இக்கேள்வி எழுகிறது. மனித மனங்களில் மாற்றம் வந்தும் நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டியது அனைவரின் கடமை, அனை வரும் மனிதத்துடன் வாழ முயற்சி செய்தாலே சிக்கல்களை சரி செய்யலாம்.
எண்ணங்களே ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்காமல் வருகிறது. உடலால் அவர்களைப் பிரித்துப் பார்த்து மனரீதியாக ஏன் ஒடுக்குகிறோம்?
ஆண், பெண் இருவர் சிந்தையிலும் இதற்கான மாற்றுவர வேண்டும்.
கதை சொல்ல முடியாதவர்கள் சொல்ல முன்வர வேண்டும். கேட்பவர்கள் கேட்க முன்வரவேண்டும். சரியான முன்னெடுப்பிற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். என்பதை இப்புத்தகம் வலியுறுத்துகிறது
சமூக அக்கறைக்கொண்ட முற்போக்கு எண்ணங்கள் கொண்ட பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒடுக்கப்படுவதும், அடக்கி அழிக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இதற்கு தனிமனித சமுதாயப் பார்வையில் மாற்றம் வரவேண்டும். நீதிமன்றக் கட்டிடங்கள் உயிர்ப்புடன் இருப்பது மிக அவசியம்.
எனதயும் கண்டும் காணாமல் செல்லும் மனித மனங்களில் மாற்றம் வரவேண்டும். அலைபேசிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆறடி மனி தனுக்கும் கொடுக்கப்பட வேண்டும். கற்பனை நயம் செறிந்த உண்மை நயம். மனித மனங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே நின்று துண்டிக்கப்படுகிறது.
சிந்தை தேவையற்றதை தேடுவதை நிறுத்தி விட்டு சமுதாய நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை ஆய்வதை துவங்க வேண்டும். இப்படிப்பட்ட துவக்கமே வாழ்வை சுவைக்க வைக்கும்.
தொழில் நுட்ப வளர்ச்சிகள் நல் விசயங்களின் பயன்பாடுகளைக் குறைக்கிறது. உறவுகளுக்கு இடையேயான இணக்கம் குறைந்து கொண்டு வருகிறது. ஒப்பீடற்ற வாழ்வும், போதும் என்ற மனமுமே வாழ்வை வாழ வைக்கும். சுதந்திரம் தணிக்கை செய்வது தடுக்கப்பட வேண்டும். கதைக்கும் நடப்புக்குமான தொடர்பு அறிந்தேன். தொழில் நமது நாடு இன்றும் சாதி நாடாகதான் உள்ளது. மலம் என்ற வார்த்தையிலும், தொழிலும் தாழ்வு இல்லை. வாழ்வியலோடு இணைந்த ஒன்று. ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும். சமுதாய அவலங் களை எதிர் கொள்ளும் மக்களை உயர்த்திப் பேசி அவர்கள் படும்பாட்டை உணர வைத்துள்ளார் தோழர் ஆதவன் தீட்சண்யா.
சட்டம், மருத்துவம், கல்வி, தொழில் முதற் கொண்டு அனைத்துத் துறைகளிலும் சாதியின் காரணமாக ஒடுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
படைப்பாளருக்கு எனது பாராட்டுக்கள், நன்றிகள்
சாய் ஆனந்தி, திருவேற்காடு
ஆக முதலாக நான் பதிவு செய்ய வேண்டிய ஒன்றுள்ளது. “சொல்லவே முடியாத கதைகளின் கதை” சிறுகதைத் தொகுப்பின் சில பக்கங்களை கடந்தபின் வாசிப்பை தொடர்வது ஒருவேளை கடினமாகவோ, ஈர்ப்பில்லாமலோ இருந்தால் இப் புத்தகத்தை புறக்கணித்து அலமாரி ஏற்றிவிடக்கூடாத மீண்டும் மீண்டும் வாசித்து உணர்ந்துக்கொள்ள வேண்டிய புத்தகம். ஏனெனில் வரலாற்றின் பல நிகழ்வுகளை வேரெங்கும் தேடி தேடி அறிந்துக் கொண்டாலும் அவை வெறும் சருகுகளாக இருக்கலாம் அது அல்லாமல் வரலாற்றின் வேர்களை உண்மை தன்மையோடு அறிய இப் புத்தகம் ஒன்று போதும். இது எளிய வழி. மறுவாசிப்பு செய்யும் வாசகன் ஒவ்வொருவரின் மனதுக்கு நெருக்கமானதாக மாறும் ஆசிரியர் ஆதவன் தீட்சன்யாவின் எழுத்து..
மொழி என்பது ஒலி. அதற்கு இலக்கணம் கிடையாது. மொழியை சித்திரத்திலிடும் எழுத்துக்கு தான் இலக்கணம் எல்லாம். மொழி சுதந்திரமானது. எந்த வர்க்க வட்டத்துக்குள்ளும் சிக்காதது. மொழிக்கும் எழுத்துக்கும் உள்ள உறவை மிக துள்ளியமாக வசப்படுத்தியுள்ளார் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா. பாரதி வேடமிட்ட பெண்ணின் கம்பீரம் போல் தனித்துவமான எழுத்தாளர் இவர். “சொல்லவே முடியாத கதைகளின் கதை” சிறுகதைத் தொகுப்பு இவரெழுத்தின் தன்மைக்கு ஒரு பதம்.
எட்டு தொகுதிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த இந்திய சமுக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களையும், அதில் மாண்டவர் களின் ஓலங்களையும், செய்யபடாத முழக்கங் களையும், நிறவேற்றாத முடிவுகளையும், வலிகளை யும், சாட்சியங்களையும், தீர்க்கபடாத வழக்கின் உண்மைகளையும், நலிந்தவர்களின் ஆற்றாமை களையும் பதிவு செய்கிறது. அறிந்த இந்தியாவின் அறியபடாத வடுக்களை வாசகனுக்கு தெளிவுப் படுத்துகிறது இப்புத்தகம்.
தெளிபடுத்தும்தான் ஆனால் யாருக்கு எந்த அளவு தெளிவை தருமென்று வித்தியாசமுண்டு. உங்களுக்கு பரீட்சை இந்த புத்தகம்.. வாசகர் அனைவருக்கும் ஒரே மார்க் வருமா என்ன. பலர் முதல் முயற்சியில் ஃபெயிலாகக்கூடும். சப்ஜக்ட் நாளேட்ஜ் இல்லாத பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸாகற மாணவர்களும் உண்டுதானே. ஸ்பேனரை பத்தி தெறியாத மெக்கானிகல் இன்ஜினேயர் மானவன் மாதிரி. இந்திய சமூக வரலாற்றை பற்றி எந்த அளவு அறிவு சேமிப்பு உள்ளதோ அந்த அளவுக்கு ஆசிரியரைத் தொடர முடியும்.
ஏனெனில் நேரடியாக சாடாமல் பல யுக்திகளை கையாண்டு தான் செய்தியை ஏய்திருக்கிறார் ஆசிரியர். ஆயினும் மரத்தின் பின்னின்ற ராமனின் அம்பை போல் வேகமும், விவேகமும், கூர்மைக்கும் குறைவில்லை.
இரவிலும் பூமியின் மற்றொரு பக்கத்தில் தகித்துக்கொண்டிருக்கும் சூரியனை போன்ற ரன்ஜித் வரலாற்றில் வாழ்ந்தவனா, ஆசிரியரின் கற்பனையில் வாழ்பனா என்ற குழப்பம் என்னை போன்றே பலருக்கும் வரலாம்.
காந்தியின் ஆத்மா சொல்லட்டும் மகாத்மாவா இல்லையா என்று. மறுவாசிப்பு அவசியமான ஒர் படைப்பு இது. அதுவே பல விடுகதைகளுக்கான விடைகளை அவிழ்க்கும்.
வெற்றி திரைபடங்களின் திரைகதைகள் இப்புத்தகத்தில் பத்திக்கு பத்தி உள்ளது. அதாவது இப்புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் வெற்றி திரைபடங்களுக்கான திரைகதை உள்ளது.
2010ல் தொகுக்கப்பட்ட கதைகள். அதற்கும் முன்பே எழுதபட்டதாக இருக்க வேண்டும். இப்பொழுது எழுதினால் தூத்துக்கூடி ஸ்டெரலைட் துப்பாக்கிச் சூடும், முகிலன் தலைமறைவும், கைலாசா ஆசிரம படுகொலைகளும் எழுதப்படும். ஆயினும் அவற்றின் சாரமான கொத்தடிமையோ, பெண்ணடிமையோ, சூழல் போராட்டங்களோ, தாழ்பட்டவர் உரிமை போராட்டங்களோ, இட ஒதுக்கீடு முறைகேடுகளும், முதலாளித்துவ சுரண்டல்களோ இன்னும் பலவும் இன்னும் மாறவில்லை என்பது அச்சுறுத்துகிறது.
VKS Gomathi:
வி. க. சீ. கோமதி
ஈரோடு
அகவிழி – இலக்கியச் சந்திப்பு : 21
நூல் விமர்சனம்: சொல்லவே முடியாத கதைகளின் கதை
ஆசிரியர்: ஆதவன் தீட்சண்யா
கதைகள் அனைத்தும் படிக்க படிக்க பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது இன்னும் நம் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்த வண்ணம் உள்ளன என்றாலும் அதன் உண்மை கதை வெளியே வருவது இல்லை. இந்த நேரத்திலும் தில்லியில் மதம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தி மக்களின் சராசரி வாழ்க்கையில் மீளாத துயரத்தையும் உருவாக்கி வருகிறது ஒரு குறிப்பிட்ட கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவித்து வரும் தீய சக்திகளை எதிர்த்து மக்கள் ஒன்று திரள வேண்டும். வெளி வேடமிட்டு நாசவேலை செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனை பெறவும் அதைப் பற்றி கேட்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தங்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்காலம் குறித்து அச்சப்படும் வகையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும். பாரபட்சம் இல்லாமலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சாதி மத பேதமின்றி சகோதரத்துவம் ஏற்படும் போது இந்த கதைகள் இனி நடக்க கூடாது என்னும் எண்ணம் ஏற்பட வேண்டும்.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதைகளிலும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் சொல்ல முடியாத துயரத்தை கூறுவது போல கூறப்படுகிறது. சில கதைகளில் கற்பனைக்கு எட்டாத படி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு விவரிக்கும் விதமாக உள்ளதால் படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. பல்வேறு சமூக சிக்கல்கள் மற்றும் அவலங்களை அறிந்து கொள்ள இந்த நூல் உதவியாக அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என தோன்றுகிறது.
கழிவுகளை சுத்தம் செய்யும் வேலையை செய்வதற்காகவே குறிப்பிட்ட மக்களை தாழ்ந்த சாதியினர் என்று முத்திரையிட்டு வைத்துள்ளது பற்றிய தகவல்கள் கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் கதை தெரியப்படுத்தி இருக்கிறது. அவர்கள் அனைவரும் சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் பற்றிய தகவல்கள் கதையின் வழியாக சிறந்த முறையில் கூறப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் தொழில்நுட்பம் விண்ணைத்தாண்டி உயர்ந்து இருந்தாலும் இவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த எந்த ஏற்பாடும் செய்யும் எண்ணம் ஒன்றும் தோன்றவில்லை அதிகார வர்க்கத்தினர் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு என்பதால் இது தொடர் கதையாக இருக்கிறது.
.
செல்போன்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு ஓர கழுத்தர்களாக மாறியது மற்றும் பயன்படுத்தாத மக்கள் நேர்க்கழுத்தர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் தீண்டாமை பற்றிய குறிப்புகளும் நகைச்சுவை கலந்து கூறியுள்ளார்.மாயபிண்டம் என்று செல்ஃபோனை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.
பிராமணிய விதவைகள் தங்கள் கணவன் இறந்த பிறகு சந்திக்க நேரிடும் துயரங்களை கேட்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் வேதனையாக உள்ளது. தன் சுயநலத்திற்காக ஒரு பெண்ணை அடிமைப் படுத்துவது பற்றிய தகவல்கள் அனைத்தும். படிக்கும் போது வேதனையாக இருக்கிறது. இதனுடன் சில முக்கிய செய்திகளையும் சேர்த்து புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
கணவன் இறந்த பிறகு பெண்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் சுய நலனுக்காக வாழ்க்கை முழுவதும் அடிமை முறையை பயன்படுத்தி துன்புறுத்தி மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் மனைவி இறந்த பிறகு ஆண் தன் மகளை விட இளம் வயதுப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும் அதைப் பற்றிய கேள்வி கேட்க முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நூலை வாசிக்க தொடங்கியது முதல் இதற்கு எப்படி விமர்சனம் எழுதுவது என்ற எண்ணம்தான் ஏற்பட்டு வந்தது.ஒவ்வொரு கதையிலும் அறிந்து கொள்ள உதவும் பல்வேறு சம்பவங்களை பற்றிய புள்ளிவிவரங்களுடன் கூறப்படுகிறது. இந்த நூல் வாசிக்கும் பொழுது நம் நாட்டில் / ஊரில் அறிந்து கொள்ள முடியாத நிலையில் பல்வேறு வகையான தகவல்களையும் கதை வழி கூறப்பட்டுள்ளது.
இந்த ஒரு நூல் வாசிப்பின் வழியாக அரசியல், சமுதாயம் , மக்களின் வாழ்வின் ஒவ்வொரு நாளும் சந்திக்க நேரிடும் கொடுமைகள், பாலியல் வன்முறைகள் பன்னாட்டு சதித்திட்டங்கள் என்று அனைத்தை பற்றியும் புரிந்துகொள்ளும் வகையில் கருத்து களஞ்சியமாக தெரிகிறது. ஆதவன் தீட்சண்யா அவர்கள் எழுதிய பிறநூல்கள் அனைத்தையும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டுகிறது. வட்டார மொழிகள் பயன்பாடு மற்றும் ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்வில் சந்தித்து வரும் வெளியில் கூறமுடியாத பல்வேறு இன்னல்கள் உண்மையாக நடைபெற்று வருகிறதா என்று அஞ்சும் அளவுக்கு அதிகமான தகவல்களை கூறுகின்றன. தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு அடிமை வேலை செய்வதற்காகவும், எப்போதும் ஒரு அச்ச உணர்வு கொண்டவர்களாகவும், தீராத கடன் சுமையை கொண்டவர்களாகவும் எந்த ஒரு சுகத்தையும் சந்தோஷத்தையும் அறியாமலே பிறருக்கு கொத்தடிமைகளாக வ
ாழ வேண்டிய
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்கின்றனர். தங்கள் சொந்த ஊரை விட்டு சென்று எங்கு வசிக்கிறோம் என்பது கூட அறியாமல் அடிமைப்படுத்தப்பட்டு தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய எந்த அரசியல் கட்சியும் செயல்படுவது இல்லை. அவர்களுக்கு தங்கள் சொந்த பந்தங்கள் வளர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.