நூல் வகை : சிறுகதைகள்
தலைப்பு : எட்டு கதைகள்
ஆசிரியர் : இராஜேந்திரசோழன்
முதல் பதிப்பு : டிசம்பர் 2014
பதிப்பு : வம்சி, 19, டி.எம். சாரோன், திருவண்ணாமலை. 606 601.
அலைபேசி : 94458 70995
பக்கங்கள் : 96
விலை : ரூ.100/
நூல் வகை : சிறுகதைகள்
தலைப்பு : எட்டு கதைகள்
ஆசிரியர் : இராஜேந்திரசோழன்
முதல் பதிப்பு : டிசம்பர் 2014
பதிப்பு : வம்சி, 19, டி.எம். சாரோன், திருவண்ணாமலை. 606 601.
அலைபேசி : 94458 70995
பக்கங்கள் : 96
விலை : ரூ.100/
சுரேஷ் க., ஓசூர். தோழர் இராஜேந்திர சோழன் அவர்களுக்கு நன்றிகள் பல. நலமாக உள்ளீர்கள் என்று உணர்கிறேன்! இந்த சிறுகதை நூலை வாங்கி 20 நாட்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் புத்தகத்தை திறந்து பார்க்கவே இல்லை. தினமும் கண்ணில் படும்படி மேசையின் மேல் வைத்திருந்தேன். இதன் அட்டைப்படம் எனக்கு எப்பொழுதும் ஏதாவது சொல்வது போலவே இருந்தது. காலில் மெட்டி யுடன் வேகமாக நடந்து செல்லும் ஒரு பெண் சட்டென்று நின்றால் எப்படி இருக்குமோ அது போல் இருந்தது. அந்த முதல் இரண்டு விரல்கள் சற்று மடங்கி மற்றும் காலின் மேல் உள்ள சிறு சுருக்கம் மேலும் கணுக்காலில் தவழ்ந்து கொண்டிருக்கும் சலங்கை. கண்டிப்பாக ஒரு ரசனை இருந்தால் மட்டுமே இந்த புகைப்படத்தை தேர்வு செய்திருக்க முடியும். கதைக்கும் அட்டைப் படத்திற்கு நிறைய சம்மந்தம் இருக்கு என்பதை படிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துகொண்டேன். என்னுடைய அனுபவம் : இந்த சிறுகதைகள் 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவை என்று நினைக்கும் பொழுது சற்று என் யோசனையை நிறுத்தி இப்பொழுது நாம் அனுபவிக்கும் இக்காலக் கட்ட காட்சிகளையும் நிறுத்தி, படித்த அனைத்தையும் மனதில் அசை போட ஆரம்பித்தேன். தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நான் இந்த சிறுகதைகளை படிக்கும் பொழுது சற்றே நெகிழ்ந்து போனேன். என் வட்டாரத்து மக்களுடன் பேசும் தோரணையில் இருந்ததை நன்றாக அனுபவித்தேன். பெண்கள் அவர்களுடைய குடும்பத்தாருடன் மற்றும் தோழி களுடன் உரையாடும் பொழுது “தே” என்றும் கூப்பிட்டு கொள்வது, கண்டிப்பாக எங்களுக் கானவை மட்டுமே! பல வரிகள் என் குடும்பத்தில் நடந்த பல விஷயங்களை / சம்பவங்களை நினைவு கூற செய்தது. பல வருடங்களுக்கு பிறகு மல்லாட்ட பயிறு என்னும் இந்த வார்த்தை உங்கள் முதல் கதையில் படித்தேன். கண்டிப்பாக மற்ற மாவட்ட மக்களுக்கு இந்த வார்த்தை புதுமையாகத் தான் இருக்கும். நாங்கள் சிறுவயதில் இருக்கும் பொழுது என் அம்மா மல்லாட்டை பயிர் பிடுங்கும் வேலைக்கு சென்று வருவார். சாயங்காலம் மல்லாட்ட பயிர் எடுத்துக்கொண்டோம் வருவார் அன்றைய சம்பளமாக. எனக்கு எப்பொழுதும் நினைவூட்டும் இச்சம்பவம் மல்லாட்ட பயிர் என்னும் இந்த வார்த்தையை கேட்கும் பொழு தெல்லாம். என் பகிர்வு : எட்டுக் கதைகளையும் படித்து முடித்தபிறகு விமர்சனம் எழுதுவதற்கு கதைகளை வகை பிரிக்கும் யோசனை தோன்றியது. அதன் வகைகளைக் கீழே கொடுத்துள்ளேன். அ) 1. கோணல் வடிவங்கள் 2. புற்றில் உறையும் பாம்புகள் 3.சாவி 4. ஊனம் 5. தனபாக்கியத்தோடு ரவ நேரம் ஆ) 1. எதிர்பார்ப்புகள் 2. இச்சை 3. பரிணாமச்சுவடுகள் முதலில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் தோழர். ஏனென்றால் நடைமுறை உரையாடலாக இருந்தாலும், சில வார்த்தை களுக்கும் சில சம்பவங்களுக்கும் தெளிவான உங்களுடைய எழுத்துக்களால் பிரதிபலிக்கின்றன. எந்த வார்த்தைக்கும் பீப் போடாமல் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம், சொல்ல வந்ததை முழுமையாக, மறைக்காம சொல்லியிருக்கிறீர்கள். இந்த சமுதாயம் எப்பொழுதும் பெண்கள் மீது ஒரு அழுத்தத்தை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. ஒருத்திக்கு ஒருவன் என்பதில் மிகவும் காலூன்றி உள்ள இந்த சமுதாயம் ஒரு ஆண் மட்டும் அப்படி இப்படி இருக்க வாய்ப்புள்ளது என்பதை தெரிந்தும் தெரியாமலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வகை அ வில், அனைத்து கதைகளிலும் கணவன்-மனைவிக்குள் ஒரு தேடல் இருப்பதையும், இருபாலருக்கும் உண்டான எதிர்பார்ப்புகளையும் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். என்றும் தீராத பிரச்சனையாக இருப்பது ஆண் பெண் உறவு என்று நான் கருதுகிறேன். கதைகள் ஒரு சிறு தொகுப்பை சார்ந்து இருந் தாலும் அதனுள் இருக்கும் உளவியல் ரீதியான விஷயங்களை சற்று உள்நோக்கிய பார்க்க வேண்டியிருக்கிறது. எப்பொழுதும் ஆணாதிக்க கருத்தியல் ரீதியான சம்பவங்கள் மிகவும் பாதிப்புகளை தருவதாகவே இருக்கிறது. புற்றில் உறையும் பாம்புகள் மற்றும் ஊனம் கதைகளில் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள். குடும்பம் என்ற ஒரு வார்த்தைக்குள் ஒரு பெண்ணின் அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைக்கும் இந்தப் பழக்கம் ஆணுக்கு மட்டும் அதை ஒரு விதிவிலக்காக வைத்துள்ளது… இதை மாற்றி அமைக்க, மிகப்பெரிய மனமாற்றம் தேவைப் படுகிறது என்று உணர்கிறேன். அதுவும் சிறந்த, திறந்த மனம் கண்டிப்பாக இங்கு தேவைப்படுகிறது. சாவி மற்றும் தனபாக்கியத்தோடு ரவ நேரம் கதைகளில் உளவியலை கட்டமைக்க வேண்டிய தருணத்தை பல இடங்களில் சுட்டிகாட்டி உள்ளீர்கள். காரணம் ஆண்தான் பெண்ணைவிட உறுதியானவன் என்றும் தனக்கே அத்தனை அதிகாரங்கள் இருக்கிறது என்றும் பெண்ணிடம் அவன் உறுதி செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் இந்த சம்பவத்தை சற்று பின்நோக்கி பார்த்தால் வேட்டை காலத்திலிருந்து பெண்கள் தான் அனைத்தையும் தீர்மானிப்பவர்கள் ஆக இருந்திருக்கிறார்கள் தன்னுடன் இருக்கும் ஆண் முதற்கொண்டு. சமுதாய மாற்றத்தாலும், மத ஆளுமையின் ஆளும் ஆண் பெண் இருவரும் சமம் அல்ல என்ற எண்ணத்தினாலும், ஆண் பெண்ணை விட உறுதியானவன் என்ற கருதினாலும் இங்கு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கோணல் வடிவங்களில், ஒரு ஆண் ஒரே நேரத்தில் வேறு பெண்ணை நேசிப்பதை அவனுக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறான். ஆனால் அதே பெண் மற்றவர்களுடன் பேசுவதைக் கூட இவனால் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. இந்த ஐந்து கதைகளிலும், பெண்ணை குடும்பம் என்னும் ஒரு கட்டுக்குள் அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்து, ஒழுக்கம் சார்ந்த நிர்பந்தத்தில் தள்ளிக் கொண்டே இருக்கிறது. காதலையும், காமத்தையும், களிப்பையும் கண்டிப்பாக கொண்டாட வேண்டிய மனமாற்றம் தேவைப்படுகிறது. இந்த சிறந்த மனமாற்றம் ஆண் பெண் பாலியல் சார்ந்த உணர்வுகளையும், பிரச்சனைகளையும் மிக சுலபமாக தீர்க்க முடிய வில்லை என்றாலும் அதற்குண்டான தீர்வுகளை நோக்கி நகர வழி செய்யும். அனைத்து கதைகளின் முடிவுகளிலும் என்னதான் ஒரு ஆண் அவன் போக்கில் இருந்தாலும் சில பெண்கள் தன் ஆணோடு ஒத்துப் போவதும் அதே நேரத்தில் சில பெண்கள் அவர்களுக்கு உண்டான எதிர்பார்ப்புகளுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் முடிவடைகிறது. 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இக் கதைகளை இப்பொழுது இருக்கும் தற்கால குடும்ப சூழ்நிலைகளில் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, மேலே கூறிய இரண்டு… Read more »
ம. சுரேஷ் குமார், திருப்பூர்.
இந்த காலத்திலும் கிராமங்களில் உள்ள குடும் பங்களில் நடக்கும் சம்பவங்களை கண்முன்னே விரித்துக் காட்டுகிறது எட்டு கதைகள் சிறுகதைத் தொகுப்பு. கதைகளை வாசிக்கும்போது காட்சிகள் காட்சிப்படமாக கண்முன்னே வந்து போகிறது. இதற்கு காரணம் இராசேந்திர சோழன் அவர்கள் கிராம மக்களின் பேச்சு (வழக்கு) மொழியை அப்படியே எழுத்து நடையில் கொண்டுவந்த விதம் மட்டுமே. கிராமத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த கதையில் வரும் சம்பவங்கள் மக்களின் மனநிலையை, உணர்ச்சி களை அப்படியே பிரதிபலிக்கிறது. குறிப்பாக கிராமத்து பெண்களின் மன உணர்வுகளை பொருட்படுத்தாத ஆண்கள் பற்றிய உண்மை நிலையை விளக்குவது மிகவும் அருமையான ஒன்று.
குடும்பத்தில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு சூழலிலும் ஆண்கள் எவ்வாறு தப்பித்துக் கொள் கிறார்கள் என்பது பற்றியும் பெண்கள் எவ்வாறு தண்டிக்கப்படுகிறார்கள், மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் என்பது பற்றியும் ஆசிரியர் இராசேந்திர சோழன் அவர்கள் இயல்பாக விளக்கி இருப்பது சிறப்பாக உள்ளது. ஆணைவிட மனதளவிலும் உடலளவிலும் வலிமையான பெண் (இனம்) ” இந்த பெண்கள் ஏன்தான் இப்படி ஆங்களுக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறார்களோ” என்று வினவத் தோன்றுகிறது இவரது வரிகளை வாசிக்கும்போது.
மொத்தத்தில் கிராம மக்களின் வாழ்க்கை முறையை, மனநிலையை, வழக்கு மொழியை, பெண்களின் இயலாமையை, ஆண்களின் அதிகார குணத்தை இப்படி பல செய்திகளை பிரதிபலிக்க கூடிய கண்ணாடியாகவே எட்டுக் கதைகள் சிறு கதைத் தொகுப்பை என்னால் பார்க்க முடிகிறது. இவ்வாறான கதைகளை எழுதிய ஆசிரியர் அவர்களுக்கும், தொகுத்து வழங்கிய பதிப்பகத் தாருக்கு நன்றி.
கணேஷ். மு , திருச்சி இது போன்ற உணர்வுகளை பெரிய கருத்து பேதங்களின்றி நடக்கும் சம்பவங்களை அப்படியே கதையாக எழுதுவது மிகவும் பாராட்டுக்குரியது, சிரமும் கூட. கரணம் தப்பினால் மரணம் என்பது போல சற்றே தடம் மாறினால் ஆபாச கதையாக மாறிவிடக் கூடிய பாலின உணர்வுகளை கதையாக்கிய விதம் மிக சிறப்பு. இத்தாலியில் 1960 களில் லவ் மீட்டிங்ஸ் என்று வெளிவந்த ஒரு ஆவண படத்தில் பாலுணர்வை, குழந்தை பிறப்பு,ஒழுக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள், தத்துவ அறிஞர்கள் வரை கேட்டு இருப்பார்கள். முன்னேற்றம் அடைந்தது என்று சொல்லிக்கொள்ளும் மேற்கத்திய நாட்டில் கூட இது மிகவும் புதிய முயற்சி என்று சொல்லி இருப்பார்கள். அதை ஒட்டிய காலகட்டத்தில் இந்த கதைகள் வெளிவந்து இருப்பது பெரும் முயற்சி தான். ஆனால் ஒன்றே ஒன்று தான் எந்த ஒரு முன்னுறையும் கதையை பற்றி இல்லாததால், புதிதாக இது போன்ற கதைகளை வாசிக்கும் பொழுது முதல் ஒன்றிரண்டு கதைகளை தவிர மற்றவையில் சில என்ன கதையென்பதே புரியவில்லை. புரிந்தாலும் இந்த ஒரு சாதாரண சம்பவத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றும் புரியவில்லை. தங்கள் பேட்டியை படித்த பின்பு தான் ஓரளவு புரிந்தது. பிறகும் கதையின் போக்கை நாம் அறிந்த தகவல்கள் விடயங்களோடு ஒப்பிட்டு கொள்ள முடிகிறது ஆனால் அதே நோக்கில் தான் கதை உள்ளதா என்பதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. இதை வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்தாலோ புதிதாக வரும் பதிப்பு களிலோ ஒரு கருத்துரை இருந்தால் எதை பற்றியது என்ற தெளிவு இருக்கும். ஓரிரு முறை படித்து யோசித்து, கேட்டு தெளிந்த பின் தான் மீண்டும் தலைப்புகளை வைத்து இது எதை பற்றியது என்ற புரிதல் ஓரளவிற்கு வந்தது. கதைகளுக்குள் போனால் இன பேதமின்றி பாலியல் உணர்வு பொதுவானது ஆனால் ஆதிக்கம் செலுத்துவதும் அதை வெளிப்படுத்தும் விதமும் , இயலாமையின் போது இருவரின் வெளிப்படுத்தும் விதமும், பெண்ணை போகப் பொருளாக, உடைமையாக பார்க்கும் விதமும் தெளிவாக உணர்த்த பட்டு இருக்கிறது. கோணல் வடிவங்களை போல் ஆண் மாற்றானின் மனைவியோடு உறவு கொள்ளலாம் ஆனால் அதே அந்த பெண் வேறொரு ஆணுடன் அவளுக்கு விருப்பம் இருந்தாலும் கூட உறவு வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவன் ஆகிறான். அதே போல இவன் மனைவி விரும்பினால் அதை ஏற்றுக் கொள்வார்களா ஆண்கள் என்பது கேள்விக் குறியே. பெண் உடைமையாக, உபயோகப்படும் போகப் பொருளாக பார்க்கப் படுகிறாள் அது தான் இங்கு பிரச்சினையே. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உணர்வுகள் தனியானது. புற்றிலுறையும் பாம்பு களை போல கதையின் நாயகி மனதிற்குள் வைத்து உள்ள ஆசை, வேட்கைகள் எல்லாவற்றையும் புலம்பலாக வெளிப்படுத்துவது போல உள்ளது. சமுதாயமும், பெண் அவளுக்கே போட்டுக் கொள்ளும் வேலிகளும் யதார்த்தமாக சொல்லப் பட்டுள்ளது. தன் அழகைப் பற்றிய வர்ணனைகள் கிடைக்காத காரணமாகவும் இருக்கலாம். தற்புகழ்ச்சி உந்துதலாகவும் இருக்கலாம். பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல அவள் கணவன் அதை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளாமல், சண்டையும் இடாமல் செல்லும் பல ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை ஒரு வரியில் உணர்த்தியது சிறப்பு. சாவி ஓரிரு முறை படித்த பிறகு தான் புரியும் பூட்டாகவே இருக்கிறது. கல்லூரி காலத்தில் சில பெண்களுடன் பழகிய ஆண்களுக்கு தன்னை பற்றிய சுயமதிப்பு அதிகமாகவே இருக்கும். பிற்காலத்தில் இயலாமை அல்லது குடும்ப சூழல், பொருளாதார நிலை போன்ற காரணங்களும் கூட சேர்ந்து கொண்டு தான் நினைத்த அளவில் உறவில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள ஆண்கள் அந்த ஆதங்கத்தை, அகங்காரத்தை, சுயமுனைப்புக்கு ஏற்பட்ட பாதிப்பை கோவமாகவோ அல்லது குறையாகவோ பெண் மீதே சுமத்தி விடுவதையும், அதை பெரிதும் பொருட்படுத்தாமல் ஏற்றுக் கொண்டு சொல்லும் அநேகம் பெண்கள் இருப்பதை கடைசி ஒரு வரியில் முடித்து இருப்பது சிறப்பு. 2,3 ஆம் கதைகளில் வருவதை போல பெண்களும் ஆண்களும் மாற்றுத் தரப்பினரை அனுசரித்து செல்லும் மக்களே அதிகமாக இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எதிர்பார்ப்புகள் அநேக இடங்களில் ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதை சொல்கிறது. விடலை பருவம் வந்த பின் தன் உடல் தேவைகளை நிறைவு செய்ய துடிக்கும் பையன் ஒருவன் அருகில் இருக்கும் திருமணமான பெண் மீது ஆசை கொண்டு தீர்த்துக் கொள்ள முனைவதும், அவள் அதை நிராகரிப்பதும், அதனால் தான் புதிதாக உணர விரும்பிய ஆணின் தன்மையை நிராகரிக்கப் பட்டுள்ளதால், கோவத்தில் விலகுகிறான். இந்த பிராயத்தில் உடல் ரீதியான தேடல்கள் அதிகம் இருக்கும் என்பதால் தானோ என்னவோ அந்த காலத்தில் 15,16 வயதிற்குள் திருமணம் நடந்தது. இப்பொழுதும் மேற்கத்திய நாடுகளில் டேடிங் செல்லும் பழக்கம் இருக்கிறது. காலங்கள் மாறினாலும் அதற்கு பெயர் வேறு வைத்தாலும் இயற்கையில் தேடல் அதே தான். குடும்பத்தின் விதிகளுக்கு உட்பட்டு வாழும் பெண்ணின் சராசரி தினம் எப்படி செல்லும் என்பதை ரவ நேரம் காட்டுகிறது. தன் கட்டுப் பாட்டிற்குள் இருப்பவள் தான் பெண் என்றும் அவள் பொருளாதார நிலை தன்னை சார்ந்து இருக்கிறது என்ற நிலையில் அவளை வன் முறையால் கையாள்வது நகரம், கிராமம் என்று எல்லா இடங்களிலும் நடக்கிறது. போதை பழக்கத்தால் தன் உடல் தேவையை நிறைவு செய்து கொள்ளவும் முடியாமல் போவது மட்டுமின்றி அந்த பெண்ணின் தேவையும் நிராகரிக்கப்படுகிறது. இது பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சனை மற்றும் பிரிவு நிம்மதியின்மைக்கும் அடிப்படை காரணம். பரிணாமச்சுவடுகள் இந்த ஒன்றை தான் புரிந்து கொள்வது கடைசி வரை சற்று கடினமாகவே உள்ளது. இது ஏதோ நீண்ட காலமாக மத ரீதியான கட்டுப்பாட்டு விதிகளில் சூழல் காரணமாக மாட்டிக் கொண்ட ஒருவன் திடீரென அதிலிருந்து விலகி வரும் பொழுது ஏற்படும் குற்ற உணர்வு அவனை எது சரி என்ற குழப்பத்துக்கும் குற்ற உணர்விற் குள்ளும், அவன் மாட்டிக் கொண்டு தவிப்பதாய் தெரிகிறது. ஏதோ காரணங்களால் தன் உடல் தேவையை பூர்த்தி செய்யாது இருந்து விட்டு அதற்கு திடீரென வடிகால் கிடைக்கும் போது… Read more »
மு.பரமதயாளன், பாண்டிச்சேரி.
இந்த எட்டு கதைகளை எழுதிய தோழர் ராஜேந்திர சோழன் அவர்களுக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலியல் உணர்வை மையப்படுத்தி, பாலியல் சார்ந்த சமூக கட்டுப்பாடுகள் அதனை வரம்புகளின்றி மீறும் மனிதர்களின் செயல்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த எட்டு கதைகளில் வரும் சம்பவங்கள் அனைத்தும் ஒன்றைப் போல் ஒன்றில்லை. குடும்பம் என்ற வரையறுக்கப்பட்ட பந்தத்தில் மீறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறது.
ஆறறிவு உள்ள நமக்கு கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. ஒருவேளை கட்டுப்பாடுகள் இல்லையெனில் மீறல்கள் அதிகமாகவே இருக்கும். ஆகவே,பாலுணர்வுக்காண கட்டுப்பாடுகள், புரிதல் அவசியம் வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
அந்த காலம் முதல் இன்று வரை கட்டுப் பாடுகளை தாண்டி அருவருப்பான மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது.
பாலுணர்வு ஒருவகையான உடற்பசிதான், அதற்கு, வடிகாலும் அவசியம் தேவைதான். இருந்தாலும், கட்டுப்பாடுகள் மீறாமல், வரம்பு களுக்கு உட்பட்டு இருப்பது யாவருக்கும் நலம்.
மனித மனங்களில் கிடக்கும் அத்தனையும் கொட்டி தீர்த்துள்ளார். ஆனால், உள்ளதை உள்ள படியே ஆசிரியர் எழுதியுள்ளார். அதில், அரு வருப்பான வார்த்தைகள் எனக்கு படிப்பதற்கு புதிதாக இருந்தது ஆனாலும் மக்கள் பழகிய வார்த்தைகளை தானே ஆசிரியர் சொல்கிறார்.
மனித உடல்கள் மண்ணில் மக்கி மறைந்து விட்ட பின்பும் கூட, ஒரு எழுத்தாளர் மூலம் அம்மக்கள் பேசிய மொழியை, வாழ்ந்த வாழ்வை அப்படியே வெட்ட வெளிச்சமாக்கி பின்வரும் சந்ததிகளுக்கு எடுத்துரைப்பவர்தான் ஒரு படைப்பாளியின் நோக்கம், அந்த வகையில் ஆசிரியர் தோழர் ராஜேந்திர சோழன் அவர்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் என்னை படிக்க தூண்டிய தோழர் உமர் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இனிதே முடிக்கிறேன்.
ஷம்ஷாத், கோடம்பாக்கம், சென்னை.
எட்டுகதைகள் புத்தகம் வாசித்தேன் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான புரிதலை தந்தது. ஆனால் இவற்றை எல்லாம் படிப்பதில் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை.
மொத்தத்தில் பெண்கள் ஏதோ ஒரு வகையில் ஆண்களுக்கு அடிமையாகவே உள்ளனர் ஆண்கள் பெண்களை ஒரு போதை பொருளாகவே பார்க் கிறார்கள். மனிதன் எந்த பெண்ணிற்கு உதவி செய்தாலும் உடல் தேவையை நிறைவேற்றக் கொள்ளவே நாடுகிறான் என்பது புரிகிறது.
பெண்ணுக்கென்று ஒரு மனசு உண்டு என்று ஆண்கள் கருதுவதில்லை மொத்தத்தில் அவர்களுக்கு இச்சைக்கு பணிய வேண்டும் பணிந்தால் நல்லவள் என்பது ஆண்களின்கருத்து.
எத்தனை பெண்ணிடம் பழகினாலும் ஆண் ஆண் தான்,ஆனால் ஒர பெண் வேறு ஆணிடம் பழகினால் அவளுக்கு வேறு பெயரை ஆண்கள் சூட்டுகின்றனர்.
ஏன் கர்ப்பு என்பது பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா?
நாம் இப்படித்தான் வாழவேண்டும் என்பது வாழ்க்கை அதை கவணிக்காமல் பெண்கள் சற்று தடுமாறிவிடுகான்றனர் இந்த புத்தகத்தில் கூறப்பட்ட கதைகள் அனைத்தும் இவ்வுலகில் நம் கண் எதிரே நடப்பவை தான் இருப்பினும் சற்று மனம் நெருடலாக உள்ளது.
யாரையும் குறைக் கூறமுடியவில்லை ஒருசிலரின் வாழ்க்கை சற்று வித்தியாசமாக அமைந்து விடுகிறது இருப்பினும் என்ன தான் குறுக்கு வழியில் சுகம் தேடினாலும் அவர்கள் நிச்சயம் ஏதோ ஒரு வகை துன்புத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.
முதல் இரண்டு கதைகளை படித்து விட்டு அனைத்தும் இப்படி தான் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஆண்களின் இச்சைக்கு பெண்கள் பலியாகிறார்கள் என்பதை எடுத் துரைக்கும் விதமாக உள்ளது இந்த புத்தகம்.
வார்த்தைகள் தான் கிராமத்து நடைமுறையில் உள்ள வார்த்தைகள் காதில் கேட்கவே பிடிக்காது அதை படிக்கும் போது அறுவருப்பாகத்தான் உள்ளது.
பரிணாம சுவடுகள் ஒரு மனிதன் அவன் உருவத்தில் சற்று வேறுபாட்டால் மக்கள் அவனுக்கு வைக்கும் பெயர்கள் அதிகம் அதோடு அவனை அந்த சமூக மக்கள் அங்கிகறிப்பதில்லை என புரிகிறது அதோடு மனிதனுக்கு வித்தியாசமான கனவுகளும் பயங்கறமான கனவுகளுமே தோன்றுகிறது
இந்த கனவுகள் அனைத்தும் நிஜமானால் வாழ்க்கை அவ்வளவு தான் என்பதும் புரிகிறது.
இந்த எட்டுகதைகள் பத்தகத்தை படித்து முடிக்க முயற்சி செய்து படித்து ஒருவழியாக படித்து இதில் என்னகருத்து கூறபடுகிறது என்பதை உணர முடிகிறது.
கதைகள் இவ்வுலகில் நடப்பவை தான் வார்த்தைகள் கிராமத்து நடைமுறை வார்த்தை என்றாலும் தற்போது படிப்பதற்கு சங்கட்டமாக உள்ளது.
எழுத்தாளர் இராஜேந்திர சோழன் அவர்கள் வித்தியாசமாக இப்புத்தகத்தில் பல விசயக்களை விளக்கிஉள்ளார்.
வி.க.சீ.கோமதி
ஈரோடு.
அகவிழி இணைய வழி இலக்கியச் சந்திப்பு – 14
இராஜேந்திர சோழன் ஐயா அவர்களுக்கு வணக்கம். உங்கள் பெயரை பார்த்தவுடனே ராஜேந்திரசோழன் என்ற அரசர் தான் நினைவுக்கு வருகிறார். தங்களின் உடல் நலம் மேன்மை பெற வாழ்த்துக்கள்.
எட்டு கதைகள் புத்தகம் படிக்க தொடங்கியபோது ஒரு பகுதியில் வாழும் மக்கள் பேசிக்கொள்ளும் மொழியில் எழுதப்பட்டிருந்தது சிறப்பாக இருந்தது.
கோணல் வடிவங்களில் தவறான முறையில் உறவு கொண்டுள்ள ஒருவன் அப்பெண்ணின் மீது சந்தேகித்து நிம்மதி இழக்கிறான். ஆனால் தன் மனைவி மக்கள் பற்றிய சுயசிந்தனை ஏற்படவில்லை. பிறர் குடும்பத்தையும் கெடுத்து தன் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் வாழும் வாழ்க்கையை வாழ்கிறான்.
ஒரு பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபட்ட காரணத்தால் அப்பெண் சரியான எண்ணத்துடன் மற்ற ஆண் களிடம் பழகினாலும் அதை தவறாகவே புரிந்து கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது அந்த ஆணின் செயல்கள்.
புற்றில் உறையும் பாம்புகள் என்னும் தலைப்பே மிகவும் அருமையாக உள்ளது இதில் வன மயில் என்னும் பாத்திரத்தில் வரும் பெண் மற்ற ஆண்களை பார்ப்பதும் வீட்டை விட்டு வெளியில் வந்து மற்ற ஆண்கள் பார்வையில் படுவதும் தவறு என்ற மனநிலையில் வளர்க்கப் பட்டுள்ளார் அல்லது பழக்கப்பட்டு விட்டார். சக மனிதர்களுடன் பேச கூச்சம் கொண்ட மனநிலையில் பெண் குழந்தைகள் வளர்க்கப் படுகின்றனர் என்பதை சித்தரிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து கூறப்படுகிறது என நினைக்கிறேன். மக்கள் தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள் என்ற ஆதாரங்களாக படல் பின்னுதல், மாடுகள் வளர்ப்பது ஆகியவற்றை எந்நாளும் கூறமுடியும். தான் குற்றமற்றவள் என நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாகவும் தன் கணவனிடம் பேசிக் கொண்டே இருக்கிறாள்.
சாவி யதார்த்தமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே நடைபெறுவது போன்று உள்ளது. மனைவியை ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று இயல்பு வாழ்க்கையில் ஆண்கள் பேசிக் கொண்டு இருப்பது போல் உள்ளது.
எதிர்ப்பார்ப்புகள் தொடர் பழக்க வழக்கங்கள் குழந்தையை காரணமாக கொண்டு பல வகையான எதிர்ப்பார்ப்பு மற்றும் எல்லைகளை வரையறுக்க முடியாத மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதாக அமைந்து விடுகிறது என்பதை விளக்குகிறது.
ஊனம் என்ற பகுதியில் வரும் சாந்தா தன் கணவனிடம் மரியாதை அற்றவளாகவும் கண்ணில் காணும் மற்ற ஆண்களிடம் ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் பேசிக் கொண்டு இருப்பது முறையற்ற விதமாக உள்ளது.
கணவன்/ மனைவி என்ற உறவு தேவை இல்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரை விட்டு விலகிச் சென்று வாழ்வது நல்லது என்று தோன்றுகிறது. உடனிருந்து துன்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடப்பதை விட இது மேலானதாக இருக்கும்.
இச்சை எதைப்பற்றி விளக்கம் கூறுவதற்காக எழுதியிருந்தாலும் சில உதாரணங்கள் மற்றும் விளக்கங்களை அனைவரும் படிக்க கூடிய வகையில் எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
தனபாக்கியத்தின் ரவ நேரம் சமூகத்தில் பல இடங்களில் இன்றளவிலும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு சந்திக்க நேரிடும் இன்னல்கள் சிலவற்றை இங்கு படம் பிடித்து காட்டியது போல் உள்ளது. அத்தனை தொடர் அடி உதை களையும் தாங்கிக்கொண்டு குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சமையல் செய்வது முதல் அன்றாட பணிகள் அனைத்தையும் பெண்கள் செய்து கொண்டு இருப்பது மாற்றம் ஏற்படுத்த வேண்டியதாகும். பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வாழவேண்டியதாகவே உள்ளது என்பதை உணர்வு பூர்வமான ஆதாரத்தையும் எடுத்துக் காட்டியது சிறப்பாக அமைந்துள்ளது.
தாங்கள் மேலும் பல நூல்களை எழுத வாழ்த்துக்கள்.