நூல் வகை : கட்டுரை தொகுப்பு
தலைப்பு : சிலேட்டுக்குச்சி
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன்
முதல் பதிப்பு : ஜுன் 2020
பதிப்பு : புக்ஸ் பார் சில்ரன், பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம், நெ.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018, தொலைபேசி-044-24332424, 24332924, 24356935
பக்கங்கள் : 112
விலை : ரூ. 110/
இரா. ஜெயலக்ஷ்மி
சென்னை.
தோழர் முத்துகண்ணனின் அனுபவங்கள் அடங்கிய சிலேட்டுக்குச்சி கட்டுரை தொகுப்பு, வாசகனுக்கு சிறந்த படிப்பினை கொடுக்கும் ஆசிரியன் என்றால் அது மிகை அல்ல. இக் கட்டுரை தொகுப்பு என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது, சிந்திக்க வைத்தது, செய்து கொண்டிருக்கும் சில தவறுகளை சுட்டிக் காட்டியது, நான் செய்ய தவறிய சில கடமைகளை நினைவுறுத்தியது, என் பள்ளிகால வாழ்க்கைக்கு என்னை கூட்டிச் சென்றது. அருகாமையில் இருக்கும் அரசு பள்ளியில் கழிவறை வசதி இருக்கிறதா என சென்றுப் பாருங்கள். அது உங்களால் கூட சரியாகலாம் என்று கூறும் முத்துகண்ணனின் நினைவுறுத்தல் என் கடமையை நினைவுறுத்தி சென்றது. கல்விக் கொள்கைகள் மோசமாக இருக்கும் காலகட்டத்தில், குழந்தைகள் ஒரளவு மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறார்கள் என்றால் அதற்கு ஆசிரியர்கள் தான் காரணமாக இருக்க முடியும்.
கட்டுரைக்கு பொருந்தமான கச்சிதமான தலைப்புகள் என்னை வெகுவாக கவர்ந்தது. மனோஜ் என்ற மாணவனிடம், தான் ஏமாந்ததை கூட, பிற வகுப்பு பிள்ளைகளின் பகிர்நது சிரிந்து மகிழும் தன்மை அரசுபள்ளி ஆசிரியரிடம் தான் இருக்கும். பல புதிய, கேள்விப்படாத பட்டப்பெயர்களின் அறிமுகம் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது . பன்னீர் சாரை பற்றிய கட்டுரைகளை வாசிக்கும் போது, அவரிடம் நாம் படிக்க வில்லையே என்ற ஏக்கம் பிறந்தது. மாணவனின் கிறுக்கலில் கூட ஒரு ஒழுங்கை கண்டுபிடித்து விமர்சிக்கும் பன்னீர் சார் போன்ற ஆசிரியர்கள் கிடைத்தால் எந்த மாணவனும் தவறு செய்ய மாட்டான். பன்னீர் சாரின் கண்டிப்பையும் அடியையும் திட்டையும் வாங்கிக் கொண்ட மாணவ மனம் அந்த ஆசிரியரை நேசிக்கிறதென்றால், அந்த வகுப்பில் உயிர் இருக்கிறது என்ற, தோழர் முத்துகண்ணனின் கூற்று நூறுசதவீத உண்மை. அந்த வகுப்பறை உயிர்பு இன்று இருக்கிறதா என்பது கேள்விக் குறிதான். பார்வை இல்லாத முருகன் சார் மற்றும் ராமய்யா சாரின் நட்பும் போற்றுதலுக்குரியது. மாணவி ஜனனியிடம் இருந்த தாய்மை உணர்வு என்னை வியக்க வைக்கிறது. போதிக்கப்பட்ட ஆசைகளை கலைத்து குழந்தைகள் மனதில் இருக்கும் யதார்த்த ஆசைகளை வெளிகொணர்ந்த விதம் அருமை. அற்புதமேரி டீச்சரை தன் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளும் நித்யா , அவருக்காக வகுப்பறை அதிர, தஞ்சாவூருக்கு கேட்கும்படி கைதட்டும் மாணவர்கள், கண்களில் நீர் கசிய கள்ளமில்லாமல் சிரிக்கும் நித்யா என விரியும் காட்சியால் வாசிக்கும் கண்களிலும் நீர் கசிகிறது. பருவ வயதை தொடும் பெண்களுக்கு கிடைக்கும் அறிவுரை ஆண்பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை என்ற ஆசிரியரின் கூற்று என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. இரு ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் என்ற வகையில் எனக்கு சில பாடங்களை சொல்விக் கொடுத்தது. சனி ஞாயிறுகளில் ஹோம்வொர்க் தராத ஆசிரியர் முத்துகண்ணனின் திங்கட்கிழமை வகுப்பறை, பிள்ளைகளுக்கு சொர்க்கமாக இருக்கும் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி பிறக்கிறது. குடிகார தந்தையிடம் சிக்கி சீரழியும் சாந்தியின் நிலை கண்டு கலங்கி நிற்கும் ஆசிரியர் முத்துகண்ணன், அதோடு நின்றுவிடாமல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் செயல்பாடு பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. பெற்ற மகளையும் கட்டிய மனைவியையும் வீட்டை விட்டு துரத்தும் குடிகார கணவன், ஆண் மகனுக்கும் மட்டும் சிக்கன் பகோடா ஊட்டிவிடும் ஆணாதிக்க உலகை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் ஆசிரியர் முத்துகண்ணன். அடுத்தநாள் காலை அந்த சிக்கபக்கோடாவின் கேரிகவரை பார்த்து ஏங்கும் பெண்பிள்ளை, இப்படி பல அனுபவங்களை கடிதம் எழுத வைத்து வெளிகொணர்ந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. கோடை விடுமுறையை வியாபாரமாக்காமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையின் பார்க்காத பல பக்கங்களையும் பல அனுபவ பாடங்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையை நினைவுறுத்துகிறார் ஆசிரியர் முத்துகண்ணன். சிந்தனையை கிளறிவிட்டு எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் இடமாக பள்ளிக்கூடம் மட்டுமல்ல வீடும் சமூகமும் மாற வேண்டும் என்ற வேட்கை நிறைவேற பல முன்னெடுப்புகளை செயல்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை போதிக்கிறது சிலேட்டுக்குச்சி கட்டுரைகள். மாணவர்களின் மனநிலையை உணர ஒரு சிலேட்டுக்குச்சி போதும் என்றாலும்…. இன்னும் பல ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறை அனுபவங்களை எழுத வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. கல்லாரி மாணவர்களின் மனநிலையை உணர பேராசியர்களும் தஙகள் அனுபவங்களை எழுதுவது மிக அவசியம் என்பது என் கருத்து.
புஷ்பகலா கோபிநாத்,
ஆவடி, சென்னை.
சிலேட்டுக்குச்சி என்ற பெயர் கேட்டவுடன் நமக்கெல்லாம் என்ன ஞாபகம் வருகிறது. நம்மளுடைய பள்ளி பருவம் இல்லையா. இதோ எழுத்தாளரும், அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியருமான சக. முத்துக்கண்ணன் தோழர் அதை நினைவு படுத்தவே இக்கட்டுரையை தொகுத்துள்ளார்.
அவருக்கும், அவர் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் பல சுவாரசியமான விஷயங்களில், ஒரு மாணவன் செய்யும் குறும்பு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதே சமயம் ஆசிரியரின் அப்பாவித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளின் குடும்ப சூழல் தெரிந்தபின், அது பெண் பிள்ளையாக இருக்கும் பட்சத்தில். அவருடைய ஆதங்கத்தை அந்தப் பெண் குழந்தையிடம் கண்ணியமாக வெளிப்படுத்தும் விதம், எழுத்தாளர் மீது நல்ல மரியாதை உருவாக்குகிறது.
வந்தோமா பாடத்தை நடத்தினோமா போனோமா என்று இருப்பவர்கள் மத்தியில். ஒரு மாணவனின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும், குடும்ப சூழ்நிலையும் தெரிந்து கொண்டு அவர்களுக்கு பக்கபலமாக இருபதும். தோள் கொடுக்க வேண்டிய இடத்தில் தோள்கொடுத்து, பிறகு தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுக்கும் விதம் அருமை.
மாணவர்களிடத்தில் பிடித்த ஆசிரியர் என்ற பட்டத்தையும், அன்பையும். எங்க சார், எங்க மிஸ் என்ற உரிமையையும் வாங்கும் யுக்தியை உளவியல் ரீதியாக சிந்திக்க வைக்கிறார். அதாவது ஒரு ஆசிரியர் ஆசிரியர் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல். அவரும் ஒரு மாணவனாக இருந்த பின்புதான் ஆசிரியரானார் என்பதை சற்று நினைவுபடுத்திப் பார்த்தால். மாணவர்களை மனரீதியாக கையால்வது சுலபம் ஆகிவிடுகிறது.
இப்படி இன்னும் நம் மனதில் காலத்துக்கும் அழியாத பல விஷயங்களை புரட்டிப் போடுகிறார். வீட்டு பாடத்தில் இருக்கும் அலட்சியம். திங்கட்கிழமை வந்ததும், வரும் பயம். நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்று கேள்வி எழுப்பிய உடன் வரும் பதில்கள். அந்த பதில்கள் சந்தோஷமான மனநிலையின் வெளிப்பாடா அல்லது மன அழுத்தத்தின் வெளிப்பாடா.இதை சிரித்துவிட்டு கடந்து செல்லாமல். இந்தக் கோணத்தில் யோசிக்க வைத்த எழுத்தாளருக்கு பாராட்டுகளை தெரிவித்து ஆகவேண்டும்.
சிறு குச்சி பல் குத்த உதவும் என்னும்போது. படிக்காத மாணவன் என்று ஒதுக்கி வைக்காமல். அவனுக்கு என்று அங்கீகாரத்தை கொடுத்து, அவன் தன்மையை வெளிப்படுத்த விட்ட விதம் சிறப்பு.
படிப்பில் ஆர்வம் கொண்டு முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை, தனது மாணவன் என்று ஆசிரியர் பெருமை கொள்வதில் அர்த்தமில்லை. ஓடாத வண்டியை முயற்சித்து ஓட வைப்பதே ஒரு ஆசிரியருக்கான சரியான செயலாகும். இதற்கு எடுத்துக்காட்டாக பிட்டு பேப்பர் கட்டுரை அமைந்துள்ளது.
இன்னும் இப்படி சொல்லிமாலாத அளவுக்கு எழுத்தாளருடைய இந்த பகிர்வுகள், நாம் அனைவர் மனதிலும் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் தீர்க்கப்படாத ஒரு ஆசையை திரும்பவும் வாய்விட்டு கேட்க வைத்துவிட்டார். இதோ நாம் அனைவர் மனதிலும் கேட்கும் குரல். நாம் எப்போதுமே குழந்தைகளாகவே இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.
நன்றி.
9962704413.
த.சுமையா தஸ்னீம்
சென்னை.
நூல்:சிலேட்டுக்குச்சி
ஆசிரியர்:சக.முத்துகண்ணன்
(கட்டுரைத் தொகுப்பு)
‘சிலேட்டுக்குச்சி’ என்ற தலைப்பை படித்தவுடன் இயல்பாகவே நம் நினைவுகளை பின்னோக்கி நகர்த்தி ஆரம்பகால பள்ளி பருவங்களை மனதில் அசைபோட செய்கிறது. இது கட்டுரைத் தொகுப்பு, ஆயினும் பல்வேறு காலங்களில் நிகழ்ந்த இப்புத்தக ஆசிரியரின் அனுபவங்களின் தொகுப்பாகவே இருப்பதால், ஒரு நாவலுக்கான சுவாரசியத்துடனும், ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போலவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இப்புத்தக ஆசிரியரின் மாணவப்பருவம் முதல் பள்ளி ஆசிரியர் ஆன பின் அவருடைய மாணவர்களுடன் நடந்த உரையாடல்கள், அனுபவங்கள் ஆகிய கால் நூற்றாண்டுக்கும் மேலான பலவற்றை தொகுத்துள்ளது மிகச் சிறப்பு.
ஒவ்வொரு கட்டுரையும் தனித்துவத்துடன் மிளிர்கிறது. ஒவ்வொரு வரியிலும் உயிரோட்டம் நிறைந்துள்ளது.
ஆசிரியர் மாணவர் உறவுகள், மாணவர் உளவியல், மாணவர்களின் இயல்பான ஆசைகள், அவர்களுடைய சூழல்கள், அதனால் படிப்பிற்கு ஏற்படும் தடைகள், இன்றைய ஆசிரியர்கள் கற்பித்தல் முறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் என பலவற்றை அலசி ஆழமாக விவாதிக்கிறது. அதிலும் குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களின் மனநிலை, அவர்களின் குடும்பநிலை ஆகியவற்றை மிக இயல்பாக பிரதிபலிக்கிறது.
பல கட்டுரைகளை படிக்கும் பொழுது வாசிப்பவரின் மாணவ பருவங்களில் செய்த சேட்டைகள், அன்றைய கால மனநிலை, பல நண்பர்களின் நினைவுகள், ஆசிரியர்களின் நினைவுகள் என வாசகனை பின்னோக்கி அழைத்துச் சென்று விடுகிறது. சில கட்டுரைகளை படித்து முடிக்கும்பொழுது நம்மையும் அறியாமல் கண்களிலே கண்ணீர் கசிவதை தடுக்க முடியாத அளவு உணர்வுப்பூர்வமாக உள்ளது புத்தக ஆசிரியரின் எழுத்து.
இயல்பான எழுத்து நடை, வாசிப்பு தடையின்றி வேகமாக செல்ல வழி வகுக்கிறது. ஒரு ஆசிரியரால் ஆசிரியர்களுக்காகவும், பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட மிகச்சிறப்பான வழிகாட்டி நூல் இது. அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது, என்று கூறினால் அது மிகையாகாது.
சரஸ்வதி
சேலம்
சிலேட்டுக்குச்சி
சக. முத்துக்கண்ணன்
சிலேட்டுக்குச்சியைப் போல் ஆசிாியா் மாணவா் உறவை எந்தவிதமான ஒளிவு மறைவில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது மற்றவா்களிடம் சொல்லவே கூச்சப்படுகிற சிலவற்றை சிாிப்போடும் நயத்தோடும் ரசிக்கும் படியாக சொல்லியிருப்பது ஆசிாியாின் சிறப்பு. இதைப்படிக்கும்போது அனைவருக்கும் பள்ளிகால நினைவுகள் நிச்சயம் தோன்றியிருக்கும்.
ஒரு நல்ல ஆசிாியா் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
உதாரணமாக பன்னீா்சாா் இருந்திருக்கிறாா், மாணவா்களின் குற்றங்களை பொிதுபடுத்தாமல் அவா்களை வழிநடத்துவது, மாணவா்களைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது மாணவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஊக்குவிப்பது
மாணவா்களின் நலனில் உண்மையான அக்கறையோடு வழிநடத்துவது என்பது அனைவராலும் முடியுமா பன்னீா்சாா் போன்ற சிலா்தான் இருக்கிறாா்கள்,
மாணவர்கள் பெற்றோா்களை
விட பெரும் பகுதியை ஆசிாியாியா்களுடன் கழிக்கிறாா்கள் மாணாக்கா்களை நல் வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிாியருக்குண்டு அதை உணா்த்தும்விதமாக பன்னீா்சாா் ரோல் மாடலாக இருந்துருக்கிறாா்
மனோஜ்பய ஏமாற்றிவிட்டான்
என்று மாணவா்களிடம் சொல்வது சிாிப்பைதான் ஏற்படுத்துகிறது, ஆசிாியா்களுக்கு
வைத்திருக்கும் பட்டப்பெயா்களில் அவா்களின் மனோபாவத்திற்கேற்ப பெயா்
வைத்திருக்கிறாா்கள் தொக்குச்சிய்யம் நல்ல ரசனைதான் மாணவா்களுக்கு, ஆசிாியருக்கென்று ஒரு தனித்துவம் உண்டு எந்த வயதிலும் அவரை பாா்த்தவுடன் மாியாதையுடன்
நடந்துகொள்கிறாா்கள். பல இடங்களில் சிாிக்கும்படியாகவும் சிந்திக்கும்படியாகவும் உள்ளது.
பாா்வையற்ற முருகன்சாா் வகுப்பிலும் ஒழுங்கை பாா்க்க
முடிகிறது, ராமா்ஐயா போற்றப்பட வேண்டியவா்
பிட்பேப்பா் வைப்பதும் கலைதான் என்பதை நயத்தோடு சொல்லியிருக்கிறாா், மாணவா்களின் ஆசைகளை எழுதச்சொல்லி அவா்களை ஊக்கப்படுத்தியும் அவா்களுடன் உணவு உண்பது போன்ற செயல்கள் போற்றத்தக்கது,
மாணவா்களின் தவறுகளை பொிதுபடுத்தாமல் அதே சமயம் அவா்களுக்குள் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பது சிறப்பாக
கருதுகிறேன் அவா்மேல் மதிப்பும் கூடுகிறது.
மாணவா்களுக்கான சந்தோசம் மகிழ்ச்சி எல்லாம் கோடைதான் அதில் அவா்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறாா்கள் ஆசிாியா் பாடம் சொல்லித்தருவது மட்டும் கடமையாக கருதாமல் மாணவர்களின் மனநிலையை புாிந்து அன்புடன் வழிநடத்தும் வகுப்பில் உயிா் இருக்கும்,
மாணவா் ஆசிாியா் உறவு எப்படியிருக்க வேண்டும் என்பதை வலியிருத்தியிருக்கிறாா் ஆசிாியா்
இதைப்படிக்கும் அனைவருக்கும் நிச்சயம் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
பா. கெஜலட்சுமி, திருவொற்றியூர், சென்னை.
17 அத்தியாயங்களும் 112 பக்கங்களும் கொண்ட ‘சிலேட்டுக் குச்சி’ எனும் கட்டுரைத் தொகுப்பு, அனைவரும் வாசிக்க வேண்டிய ஒர் அரிய குறிப்பேடு. இதன் ஆசிரியர் தோழர் சக. முத்துக்கண்ணன் அவர்கள், தான் வகுப்பெடுக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராகவும் அதே நேரத்தில் தன் இளம் வயதில் மாணவனாக இருந்தும் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்னும் பழமொழிக்கிணங்க, சமுதாயத்தில் ஒருவன் நல்ல குடிமகனாகத் திகழ, பள்ளி பருவத்தில் அவனுள் விதைக்கப்படும் நற்சிந்தனைகளே அடித்தளமாக அமைகிறது. இதற்கு, பெற்றோர்களும், ஆசிரியர்களுமே முதன்மை காரணம். நல்ல பெற்றோர்களும், சூழலும் வசதி வாய்ப்பும் அமைந்த பிள்ளைகளைப் பயிற்றுவித்து 100% தேர்ச்சி கொடுத்துள்ளோம் என மார்தட்டி விளம்பரப்படுத்தும் கல்வி நிறுவனங்களை நோக்கி, ‘தேர்வில் வெற்றிபெறுவது அல்ல கல்வி, அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும், வாழ்க்கையின் அனைத்து கோணங்களையும் நின்று நிதானத்து தரிசனம் செய்யவும், சீரிய சிந்தனையோடும் நேர்த்தியான செயல்பாடோடும் அனைத்து தடைகளையும் தகர்த்து, வாழ்க்கையைக் கொண்டாட கற்றுத் தருவதே சிறந்த வாழ்க்கை கல்வி என முகத்தில் அறைந்தார் போல பேசுகிறது இந்த புத்தகம்.
ஆசிரியர் – மாணவர் உறவு உறவுகளிலே நேர்த்தியான உறவு. கற்றலும், கற்பித்தலும் ஒரேசமயத்தில் இருவருக்குள்ளும் மாறி மாறி நிகழும் தன்மை வாய்ந்தது. இந்த உறவில் வாழ்க்கை முழுவதும் முகங்கள் மாறிக்கொண்டேயிருந்தாலும், அனுபவம் இருவரையும் அன்பு சங்கிலியால் பிணைத்து ஆழ்மனதில் வேரூன்ற வைக்கும். இருவருக்குள்ளும் வயது, வரம்பு எல்லையற்றது; எதிர்பார்ப்பற்றது; தனித்துவமானது; மரியாதையும் நேசமும் இரண்டறக் கலந்து அவரவர் தன்மைக்கேற்ப வெளிப்படுவது. மேற்கூறிய அனைத்து தன்மைகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது.
தொடர்ந்து வாசிப்பவரே சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் இந்நூல் ஆசிரியர். சமகால நிகழ்வுகளை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அதை குழந்தைகளிடம் பகிர்வதோடு, சுந்தர் ராமசாமி மற்றும் பிரபஞ்சன் சிறுகதைகளைப் பாடத்தோடு தொடர்புப்படுத்துவதால் பிடித்த ஆசிரியராகவும் விளங்குவதில் வியப்பில்லை. பிறரைப் புரிந்து கொள்வதில் தானே வாழ்க்கையின் முழுமையே பொதிந்துள்ளது. மாணவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு சிறந்த உளவியலாளராகவும் தடம் பதிக்கிறார் என்பதை பின்வரும் வரிகள் இயம்புகிறது. உதாரணமாக, “மாணவப் பருவம் கிடைத்ததையெல்லாம் கொண்டாட நினைக்கிற பருவம். சின்ன பையன் போன்றதொரு தோற்றம் தான் முதலில் நம்மை புரிந்து கொள்வான் என நம்ப வைக்கிறது. ஆசிரியரைப் பிடித்திருந்ததாலேயே அவர் நடத்திய பாடமும் பிடித்திருந்தது. ஆசிரியரின் அர்ப்பணிப்பு மிக்க எந்த ஒரு வகுப்பிலும் மாணவர்கள் பொய் பேசுவதில்லை. இது கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும். வெறும் சப்தங்கள் ஆக உதிரும் வார்த்தைகளை விட நம் நடவடிக்கைதான் நம்பும்படி கற்பிக்கும்.” இம்மாதிரி சிந்தனையைக் கூர் தீட்டும் வரிகள் கட்டுரை முழுவதும் விரவியிருக்கின்றன.
நூலாசிரியர், தன் கற்பித்தல் திறனுக்குக் காரணமாகவும், முன்மாதிரியாகவும் இருந்த பன்னீர் சார், இராமரய்யா, முருகன் சார், மாதவன் அய்யா, நூலகர் இராமு ஆகியோரின் செயல்திறன் மூலம் கிடைத்த அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்கிறார். “எங்களுக்குச் செரிக்க ஏதுவானதொரு தருணத்தில் சரியான அளவில் நல்ல பதிலை அவரால் பிசைந்து ஊட்ட முடிந்தது.” என மாணவர் கேட்கும் கேள்விகளை நினைவடுக்குகளில் நிலைநிறுத்தி, தக்க சமயம் பார்த்து தெளிவான பதிலளிக்கும் பன்னீர் சாரைப் பற்றி நிறைய இடங்களில் சிலாகிக்கிறார். பார்வை தெரியாத முருகன் சாரின் கற்பித்தலை இரசிக்கும் இராமரய்யாவின் நட்பு நேசிப்பிற்குரியது. திணிப்பதாக அல்லாமல், இரசிப்பதாகக் கற்றல் நிகழ்வது எத்தனை அழகானது, என ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும், அரசும் நினைத்தால் மாற்றம் ஏற்படும் நாள் வெகுதூரம் இல்லை என்று தோன்றுகிறது. பிள்ளைகளின் மனதில் இடம்பிடிக்க, “தன் அதிகாரத்தையும் அறிவாற்றலையும் கழற்றி வைத்துவிட்டு குழந்தைகளோடு தன்னை சமப்படுத்தி கொண்டாலே” போதும். “குழந்தைகளை அங்கீகரிக்கும் விஷயத்தில் முக்கியமான இடத்தில் இருப்பவர் ஆசிரியர்தான். சிறு கைதட்டலும், பாராட்டும், அவர்கள் சொல்வதைத் கேட்கும் நிதானமும், அவர்களுக்காக சில வார்த்தைகளுமே போதும், நாம் சொல்வதைக் கேட்க, என கற்றலை எளிமைப்படுத்துகிறார்.
எந்த வாசிப்பு நம் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி நம்மை சிந்தனைக்கு உள்ளாக்குகிறது அதுவே சிறந்த படைப்பு. சிலேட்டு குச்சி எனும் தலைப்பே எனும் தலைப்பில் நம் பால்ய கால நினைவுகளை மீட்டெடுக்கும். வகுப்பறைக்குள் சமூகத்தையும் சமூகத்துக்குள் வகுப்பறையும் இணைக்கும் முயற்சி. தோழர் முத்துக்கள் டன் அவர்களுக்கு மீண்டும் நன்றியும் பாராட்டும்.
வ.சு.வசந்தா
9840816840
இலக்கியச் சந்திப்பு 29.
நூலின் பெயர்
சிலேட்டுக் குச்சி
ஆசிரியர்
சக. முத்துக்கண்ணன்
சிலேட்டுக்குச்சி என்னும் நூலின் வாயிலாக நம்மை நம் பள்ளி பருவ காலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார் சக.முத்துக்கண்ணன் அவர்கள்.
பதினேழு தலைப்புகள் வாயிலாக நாமும் அவர்களோடு வகுப்பறையில் இருப்பது போன்ற உணர்வோடு கட்டுரையைக் கொண்டு செல்லும் பாங்கிற்காக ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
எங்கள் தாத்தா கூறுவார்… ஆசிரியர் வேலைதான் நல்ல வேலை. அதுவும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பானது நேரத்திற்கு பள்ளிக்குச் சென்று நேரத்தோடு வீட்டிற்கு வரும் வேலை என்று கூறுவார். தாத்தா இப்போது இல்லை. கணினி வேலைக்கு ஆண்களும் பெண்களும் இரவு பகல் பாராமல் செல்வதை இப்போது பார்த்திருந்தால் கண்ணீர் வடிப்பார்.
ஆசிரியர் மாணவர் உறவு என்பது எத்தனை அழகானது என்பதை இக்கட்டுரை தெளிந்த நீரோடை போல் கொண்டு செல்கிறது.
பால்ய வயது சேட்டைகள், ஆசிரியரிடம் அடி வாங்குவது, ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது என்னுடைய பள்ளிக்கூடத்திற்கு என்னை அழைத்துச் சென்று விட்டது.
வகுப்பறையில் வட்டமாக அமர்வது, மரத்தடியில் அமர்ந்து கதை கேட்பது,
ஆசிரியர்களுடன் அமர்ந்து உணவருந்துவது… எவ்வளவு இனிமையான தருணங்கள்.
நானும் அரசு பள்ளியில் தான்
படித்தேன். கழிவறை வசதி இல்லாத பள்ளிகள்தான் பெரும்பாலும் இருக்கும். வயது வந்த பெண்கள் படும் பாடு சொல்லிமாளாது. பள்ளிக்கு அருகில் இருக்கும் பள்ளி தோழிகளின் வீட்டிற்கு மதிய வேளையில் சிறுசிறு உபாதைகளுக்காக சென்று வருவோம். அவர்கள் நன்றிக்கு உரியவர்கள்.
பிட்டு அடிப்பது அந்த நாளிலிருந்தே மாணவர்களின் கைவந்த கலை. மாட்டிக்கொண்டால் பள்ளிக்கு வரமாட்டார்கள்.
பிட்டு அடித்து மாட்டிக்கொண்ட மாணவனை ஆசிரியர் அனுசரித்த விதம் நெகிழ்ச்சி.
வயிரோடிய பிள்ளைகளுக்கு உதவிய நேர்த்தி மனித நேயம். வயது வந்த பெண்களும் மனத்தளவில் பாதிப்படையாமல் அவர்களுக்கு உதவிய பாங்கு போற்றுதலுக்கு உரியது.
கடிதம் எழுத வைப்பது, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பது, பிள்ளைகளின் உளவியல் பாதிக்காமல் அவர்களுக்கு ஆண் பெண் தன்மைகளை அழகாக எடுத்துக்கூறி விளங்க வைத்த பாங்கு அருமை.
ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் தந்தைதான் ஹீரோ. அது மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களே பொறுப்பில்லாமல் குடித்து சீரழிந்து வீட்டை பராமரிக்க தவறினால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியதாகிவிடும். அந்த நிலையிலிருந்து குடியை அழிக்க பாடுபடும் ஆசிரியருக்கு நன்றிகள். இது கதையோ கட்டுரையோ அல்ல. ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் சம்பவங்கள்.
மாணவர்களும் பெற்றோர்களும் அனைவரும் படிக்கவேண்டிய நூல். நன்றியுடன் வசந்தா.