நூல் வகை : கட்டுரை தொகுப்பு
தலைப்பு : சிலேட்டுக்குச்சி
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன்
முதல் பதிப்பு : ஜுன் 2020
பதிப்பு : புக்ஸ் பார் சில்ரன், பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம், நெ.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018, தொலைபேசி-044-24332424, 24332924, 24356935
பக்கங்கள் : 112
விலை : ரூ. 110/
வணக்கம்,
முத்துகண்ணன் அவர்களின் சிலேட்டு குச்சி கட்டுரை தொகுப்பு நூலை படித்து நெருங்கிய பள்ளி தோழிகளுடன் அமர்ந்து பள்ளியில் படித்த காலம் குறித்த அரட்டை அடித்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.நம் பள்ளி காலங்களில் சந்தித்த சிறு சிறு விஷயங்களையும் மாணவர்கள் பார்வையையும் சேர்த்து ஒரு ஆசிரியராக பதிவுசெய்து உள்ளார். பள்ளிகளில் ஆசிரியர்களிடம் சொன்ன பொய்கள், ஆசிரியர்களுக்கு சூட்டும் பட்டப்பெயர்கள், பிடித்த ஆசிரியர்கள், மத்திய உணவு பரிமாறிக் கொள்வது, அவசரமாக சிறுநீர் கழிக்க செல்வது, கதைகள் கேட்பது, பிட்டு அடிப்பது, படித்து பெரியவனானதும் என்னவாக போகிறாய் என்ற கேள்விக்கு பதில் சொல்வது, திங்கட்கிழமை வீட்டுப்பாடம் செய்யாமல் செல்வது, கடைசி பரிட்சை முடிந்ததும் இங்கு அடித்து விளையாடுவது, டியூஷன் அக்காவிடம் அடி வாங்குவது, என நாம் சிறு வயதிற்கு டைம் ட்ராவல் சென்று வாழ்ந்த ஒரு அனுபவத்தை தருகிறது.
மிகவும் எளிமையான எழுத்து நடை இந்த நூலை வாசிப்பதற்கு கருத்துக்களை உள்வாங்குவதற்கு சுலபமாக உள்ளது கட்டுரை இடையிடையே சிறுகதைகள் கூறியது சிறப்பு.பொதுவாக கட்டுரை என்றால் சற்று கடினமாக இருக்கும் ஆனால் இந்த நூல் அப்படி இல்லை.
ஒரு மாணவி அவள் அப்பா குடித்துவிட்டு அடிப்பதால் பயந்து உறவினர் வீட்டில் தங்கி தொன்னை உணவு உண்பது அவள் தம்பியை மட்டும் அப்பா தின்பண்டத்தை ஊட்டி வருவது என்ற பதிவு மனதை மிகவும் பாதித்தது, குடியினால் எத்தனை குடும்பங்கள் பாழாகிறது இந்த நாட்டில்.
சில பதிவுகள் நகைச்சுவையாகவும் சில பகுதிகள் மன பாரத்தையும் (ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கப் போவது போல) ஒரு உணர்வை ஏற்படுத்தியது 17 கட்டுரைகளும் எழுதிய சிலேட்டு குச்சி ஆசிரியருக்கு இருக்கும் இருக்க வேண்டிய ஈரம் தெரிகிறது.
ஒரு அழகான படைப்பை படைத்த முத்து கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
எம் . ராதிகா விஜய்பாபு
பெங்களூர்
அய்யா முத்துக்கண்ணன் அவர்களுக்கு ஆசிரியர் என்ற முறையில் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். முதல் கதையில் மனொஜ் என்ற மாணவன் ஆசிரியரை ஏமாற்றியது இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கிறது. ஆனால் இதனை மீறி ஆசிரியர் தான் ஏமாந்ததையும் தாண்டி அவனுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்து அவர் நிம்மதி பெருமூச்சு விடுவது அனைத்து ஆசிரியர்களையும் தண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
ஆசிரியர்களுக்கு பட்டப்பெயரிடுவது தொடர்கதையாக இருந்தாலும் பிடித்த ஆசிரியர்களுக்கு தனி மரியாதை தருவது அனைத்தும் தொடர்கதையே.
பன்னீர் சார் போல் ஒவ்வொரு மாணவருக்கும் கிடைத்தால் ஒரு சிறந்த சமுதாயம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய அணுகுமுறை நமக்கு பெறாமலேயே ஏற்படுத்துகிறது. அதேபோல் ராமரைய்யாவை பார்த்தாலும்
பொறாமையாக உள்ளது.
கதைகளுக்கு மரணமில்லை என்பது யதார்த்தமான உண்மை. இன்றளவும் கதை கேட்பதில் மாணவர் மட்டுமல்ல பெரியவர்களும் கதை விரும்பிகளாக உள்ளது தெரிந்த கதை தான்.
ஆசிரியர் நீ என்னவாகப்போகிறாய் என்று கேட்கும் கேள்விக்கு மாணவர்களின் வெள்ளந்தியான பதில் சிரிப்பை வரவழைக்கும்.
மாணவர்களின் பள்ளிக்கூட சங்கடங்கள் பருவத்திற்கு ஏற்றார் மாறுபடுவது எனது பள்ளி நாட்களை நினைவுப்படுத்துகிறது. பள்ளிப்பருவத்தில் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல்காலையிலிருந்து மாலை வரை அடக்கி வைத்து வீட்டிற்கு வந்ததும் முதல்ல கழிப்பறைக்கு ஓடி… வெளியில் வந்ததும் ஸ் அப்பாட இந்த அவஸ்தை போதுமடா சாமி.
அய்யாவோட எழுத்துகள் நம்மை நம்முடைய பால்ய காலத்திற்கு அழைத்து சென்றது என்பது என்னவோ உண்மை.
பா.பேகன்
செங்கல்பட்டு
சிலேட்டு குச்சி கட்டுரை என்னுடைய பள்ளி கால நினைவுகளை கண்முன்னே நிறுத்தியது. இதன்மூலம் என்னுடைய பள்ளி அனுபவங்கள் மீண்டும் எனக்கு அனுபவிக்க கிடைத்தன.
உண்மையில் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு இந்த மாதிரியான பள்ளி சூழலோ, நண்பர்கள் கிடைப்பதோ ஆசிரியர்களோ கிடைப்பதோ அரிதுதான். அதிலும் தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த வாய்ப்பு அமையாது காரணம்.
தனியார் பள்ளியில் பொருளாதார ரேகை ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த ரேகையை கடந்தவர்கள் மட்டுமே தனியார் பள்ளியில் பயில முடியும்.
பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த இடம், பொருளாதாரத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத அரசுப்பள்ளியின் அனுபவங்களை கொண்டிருக்காது என்பது உறுதி.
இக்கட்டுரையில் என்னை மிகவும் பாதித்த இடம், குழந்தைகள் கடிதம் எழுதுவது… குடி எவ்வாறு ஒரு குடும்பத்தை சிதைக்கிறது, அது குழந்தைகளின் மனதை எவ்வாறு பாதிக்கிறது, பொதுவாக பெரியோர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகள் குழந்தைகளுக்கு எவ்வாறு பாதிப்பை உருவாக்குகிறது, அவர்களுடைய வாழ்வில் அது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது.
சிலேட்டு குச்சியின் ஆசிரியர் தான் அனுபவித்ததை மிகத் தெளிவாக அதேநேரத்தில் எளிமையாக விவரித்துள்ளார்.
ஆனாலும் சில இடங்களில் ஒரே கருத்து மீண்டும் மீண்டும் வருவது போல் இருந்தது. அது சற்று அயர்வை கொடுத்தது.
இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு தன்னால் இயன்ற உதவிகளை செய்து, அவர்களை உயர்த்துவதற்கான வேலைகளை செய்ய வேண்டும்.
அதை விடுத்து நீட் போன்ற வேண்டத்தகாத விஷயங்களை திணித்து இம்மாதிரி பிள்ளைகளை மீண்டும்மீண்டும் கஷ்டத்திற்கு உள்ளாக்கி ஒரு தலைமுறையே அழித்தொழிக்கும் செயல்களை செய்யக்கூடாது. இன்று அது சிலருக்கு சிறப்பாக தெரியலாம். ஆனால் எதிர் காலத்தில் அனைவருக்கும் இது பாதிப்பையே உருவாக்கும்.
இந்த கட்டுரைகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், அது மாணவராகவோ, பெற்றவராகவோ, ஆசிரியராகவோ இருக்கலாம்.
கண்டிப்பாக அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கும் அல்லது ஒரு நெருப்பை பற்ற வைக்கும். பள்ளி அமைப்பு எப்படி செயல்பட வேண்டும், பள்ளி அறை எவ்வாறு இருக்க வேண்டும், எந்த சூழலில் இருக்க வேண்டும், அதன் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும், ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், பெற்றோர்களின் பொறுப்பு என்ன, மாணவர்களின் பொறுப்பு என்ன போன்ற பல விஷயங்களை படிப்பவருக்கு தெளிவாக எடுத்துரைக்கும்.
தவிர, சென்ற தலைமுறையின் அனுபவங்களை, இந்த தலைமுறையினர் இப்புத்தகத்தின் வாயிலாக அனுபவித்துக் கொள்ளலாம்.
த. எழிலரசி
திருக்கழுக்குன்றம்.
சிலேட்டுக்குச்சி – சக.முத்துக் கண்ணன்
நமது பள்ளி பருவத்தை கண்முன்னே கொண்டு வந்ததில் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.மரத்தடியில் அமர்ந்து கதை கேட்ட நாட்களை அசை போடுகிறது மனது .
நமது கதை சொன்ன ஆசிரியர்களை திரும்பவும் ஞாபகப்படுத்தி மனம் நெகிழ செய்கிறார் ஆசிரியர். நானும் ஒரு ஆசிரியராக வந்திருக்கலாம் என்ற ஏக்கத்தை இந்த கட்டுரைத் தொகுப்பு ஏற்படுத்துகிறது .
அனைத்துமே ஒரு சிறுகதையின் மாதிரியாகவே நான் உணர்கிறேன். மிகவும் ஈர்ப்பு தன்மையுடனும் குழந்தைகளின் உளவியலை மிக கச்சிதமாக முன்வைக்கிறது. ஆசிரியர்களின் திறமைகளை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார் மிகவும் சுவாரசியமாகவும் அதே நேரத்தில் நம் பள்ளிக்கால அனுபவங்களையும் கண்முன்னே நிறுத்துகிறது.
பள்ளி கால அனுபவங்கள் மிகவும் சுவாரசியமாகவும் மனம் விட்டு சிரிக்கும் படியும் உள்ளது இந்தக் கட்டுரைத் தொகுப்பை படிக்கும்போது சில இடங்களில் சிரிப்பும் நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் (கழி வறை ) என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது தோழரின் ஆசிரியர் பணி மேலும் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
சிலேட்டு குச்சி
சத்யா சம்பத்குமார்
பெருவளநல்லூர்
9488794657
சிலேட்டு குச்சி படிக்கும் அனைவருக்கும் அவர்களின் பால்ய வயது பள்ளியின் நினைவலைகளை தட்டி எழுப்பும் என்பது சந்தேகமின்றி நிரூபணமாகிறது. இதன் மூலம் நாம் பள்ளி வயதில் செய்த சேட்டைகளும், சக தோழர்களின் சேட்டைகளும் நினைவில் வரும் பொழுது துள்ளிக்குதிக்கும் அளவிற்கு உடலும், மனதும் சந்தோஷத்தில் நிரம்பி உள்ளது .அதுவும் தவறு செய்து ஆசிரியரிடம் அடி வாங்க தப்புவதற்காக கூறப்படும் பொய்கள் மிகவும் எதார்த்தமான வை, மிகவும் சுவாரசியமானவை, மனோஜ் மூலம் ஆசிரியர் ஏமாற்றப்படுவதை படிக்கும் பொழுது வயிறு குலுங்க சிரிப்பதாக அமைந்துள்ளது.
பட்டப்பெயர் என்பது மாணவர்களால் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் சிறந்த பட்டமாகும். பட்டப்பெயர் இல்லாத ஆசிரியரே இருக்க முடியாது.
மாணவர்களின் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப ஆசிரியர்களின் குணாதிசயங்களுக்கு அல்லது அவரது தோற்றத்திற்கு பொருத்தமாக வழங்கப்படும் பட்டப் பெயர்களை படிக்கும்போது மாணவர்களை நினைத்து பெருமையாக உள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனது தந்தை தான் முதல் ஹீரோ அடுத்ததாக அவர்களது ஆசிரிய பெருமக்களே அவ்வாறு ஹீரோவாக ஆசிரியர்கள் வாய்க ப்பட்ட குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
இயற்கை உபாதை களால் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது அதனை அனைவரின் முன்பு கூறி அவர்களை அசிங்கப்படுத்தி தண்டிக்காமல் தனியாக பரிவு காட்டி அவர்களுக்கு உதவி புரிவது என்பது பொறுமையும் ,மனதும் கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே முடியும் இச்செயல் மிகவும் சிறப்பு.
ஒரு வகுப்பு ஆசிரியர் தனது மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு எடுத்துக் கொள்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது ,அதுவும் பகிர்ந்து கொள்ளுதல் என்பது இன்னும் சிறப்பு ,இதன் மூலம் அவ்வாசிரியர் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்பிக்கிறார் அவை பகிர்ந்து உண்ணுதல், ஏற்றத்தாழ்வு பார்த்து உணவை மறுக்காமல் இருத்தல், அனைத்து தரப்பு மக்களின் சுவைகளையும் அறிய உதவி புரிதல், அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு உணவு உண்பது என்பது அவர்களின் மனநிலையை மிகவும் லேசாக மாற்றும் இது மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கு மிகுந்த தேவையாக அமையும்.
இன்று ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை தாண்டி எதையும் கற்பிக்க தவறுகின்றனர் . ஆனால் சமூக நல்லிணக்கத்திற்கும் ஒழுக்கத்திற்கும் தேவையான பழக்கங்களை கதைகளின் மூலம் மாணவர்களுக்கு புகட்டுவது சிறப்பு இதனை அறிவுரையாக வழங்கினால் மாணவர்கள் ஏற்க மாட்டார்கள் ,அதையே ஒரு சிறந்த கதையாக மாற்றி அவர்களுக்கு பிடித்த ஆசிரியர் களின் வாயிலாக கேட்கும் பொழுது அவை மனதில் சிறந்த ஒரு இடத்தில் அமரும். அவையே ஒரு சிறந்த மனிதனை உருவாக்க அடித்தளமாக அமையும்.
ஒவ்வொரு மாணவனும் எதிர்காலத்தில் தான் என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர்களின் திணிப்பில் இருந்து விலக்கி உண்மையாக அவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கு அவர்களை ஊக்கப்படுத்துவது சிறந்த ஆசிரியர்களின் கடமை இதனை பல ஆசிரியர்கள் சிறப்பாகவும் செய்கின்றனர்.
ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண் தன்மையையும், பெண்ணில் இருக்கும் ஆண் தன்மையையும், பருவ வயதில் அவர்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் ஏற்படும் மன மாற்றத்தையும் மாணவர்கள் தவறான வழியில் செல்லாமல் உண்மையாக புரிந்துகொண்டு செயல்படுவதற்கு ஆசிரியர்களின் அணுகுமுறை மிகவும் தேவை ,இக்கதையில் ஆசிரியர் அதனை மிக சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்.
பிட்டு பேப்பர் எழுதுவது என்பது ஒரு மிகச் சிறந்த கலைதான் ஒரு மிகச் சிறிய துண்டு பேப்பரில் பெரிய கேள்விகளுக்கு பதில்களையும், ஃபார்முலா களையும் மாணவர்கள் திறம்பட எழுதி அதனை பயன்படுத்துவது என்பது அவர்களின் திறமையே ஆகும் (தவறான திறமை) இதனை ஆசிரியர்கள் அறிந்து அதனை அவர்களுக்கு ஏற்றவாறு நல்வழிப்படுத்துதல் சிறப்பு ,இக்கதையில் அதனை வேறு மாதிரியாகவும் சிறப்பாக வடித்துள்ளார் ஆசிரியர்.
பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரம் கிட்டத்தட்ட ஒரே அமைப்பாக தான் இருக்கும் .அதிலும் குடிகார தந்தை என்றால் அவர்கள் படும் கஷ்டங்கள் மிகவும் வேதனை உடையது, அவர்கள் வீட்டுப் பாடம் செய்யாததற்கு காரணம் பெரும்பாலும் அவர்களுடைய பெற்றோர்களே அவர் இதனை புரிந்து கொண்டு அவர்களை அணுகுவதும் அதன்மூலம் அவர்களை கஷ்டப்படுத்தாமல் தட்டிக் கொடுத்து அவர்கள் திறமையை வளர்ப்பது என்பது ஆசிரியரின் கடமை, மனிதாபிமான செயல், இதனை இவ்வாசிரியர் திறம்பட செய்துள்ளார்.
எழுதுவது என்பது ஒரு மனிதன் தான் கூற முடியாத பல கஷ்டங்களை எழுத்துமூலம் கூற முடியும் ,அதனை மாணவர்களுக்கு ஊக்கப் படுத்தி அதன் மூலம் அவர்களின் எழுத்தறிவை வளர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களின் கஷ்டங்களையும் அறிந்து அதற்கு ஏற்ற நற்பலன்களையும் அளிப்பது சிறந்த முறை இது மிகவும் வரவேற்கத்தக்க முறையும் ஆகும் மேலும் மாணவர்களின் கஷ்டங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் அன்பு மனம், கூட்டு பிராத்தனை பழக்கம் அனைத்து மாணவர்களிடம் இருப்பது சிறப்பு, அதற்கு ஆசிரியர்களே துணை புரிய வேண்டும்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி துணை புரியும், மேலும் கல்வி மட்டுமே தான் துணை புரியும் என்பது அல்ல ஒரு மனிதனின் சமூக நல்லிணக்கம் அவனது நேர்மையான மனநிலை உழைப்பு ஆகியவை அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் ஒரு மனிதனை உயர்த்தும், இதனை ஒவ்வொரு மாணவர்களுக்கும் குறிப்பாக கல்வியில் பின் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களது பெற்றோர்களுக்கும் புரியும்படியாக கூறி அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை ஒவ்வொரு மாணவர்களின் போக்கிற்கு ஏற்றபடி அவர்களை போகவிட்டு அதிலிருந்து அவர்களை உயர்த்த வேண்டும் .இதனை இந்நூலாசிரியர் மிகவும் திறம்பட சிறப்பாக விளக்கியுள்ளார்.
நன்றி
பிரேமாவதி நீலமேகம், குன்றத்தூர்
குழந்தைகளுடனான உலகம் எப்போதும் குதூகலமானதும் ரசிக்கத்தக்கதுமாகும். குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலவழிக்கிற வாய்ப்பு ஆசிரியர்களுக்கே வாய்க்கிறது. அந்த வகையில் ஆசிரியர் பணி என்பது மகத்தானது மட்டுமல்ல, மகிழ்ச்சியானதும் கூட. இங்கு ஒவ்வொரு மாணவரும் ஒரு தனி ரகம். அவர்களை உடனிருந்து கவனித்தால் மட்டுமே அதனை உணரமுடியும். வெறுமனே பாடத்தை நடத்தி மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் எடுக்க வைப்பதல்ல ஆசிரியர் பணி. ஒவ்வொரு மாணவனையும் இந்தச் சமூகத்துக்கானவனாக செதுக்கும் அறப்பணி. மற்ற எல்லா பணிகளையும் விடவும் ஆசிரியர்களுக்கு இந்தச் சமூகத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பணியில் தன்னை விருப்பத்துடன் ஈடுபடுத்திக் கொள்ளும் ஆசிரியர்கள் இந்தக் காலத்தில் அருகி வருவது வருத்தற்குரிய விடயமே. இருப்பினும் சிலேட்டுக்குச்சி நூலின் ஆசிரியர் சக. முத்துக்கண்ணன் போன்ற சிலரும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்களுடனான, அதுவும் அரசுப் பள்ளி மாணவர்களுடனான தொடர்பு என்பது இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவும் மையமாகத் திகழ்கிறது. அங்குதான் பலதரப்பட்ட மாணவர்களைக் காணமுடியும். அவர்களின் மகிழ்ச்சி, துக்கம், கவலை, பிரச்சினை என்று பலவற்றையும் புரிந்துகொள்ள முடியும்.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ள ‘சிலேட்டுக் குச்சி’ கட்டுரை தொகுப்பு நூல், ஆசிரியராகப் பணிபுரியும் முத்துக்கண்ணன் அவர்கள் தான் படிக்கும் போது அனுபவித்த பள்ளி வாழ்க்கையையும் இப்போது அவர் பார்க்கும் மாணவர்களின் அனுபவங்களையும் தொகுப்பாக கொண்டவை.
கல்வி எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைப் பல இடங்களில் ஆசிரியர் அழகாகச் சுட்டிச் செல்கிறார். அதேபோல் ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறார். அரசுப் பள்ளியின் அவலங்களையும் கோடிட்டுக் காட்டுகிறார். பெருவாரியான அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி என்பதே இல்லை. அதை தேசிய அவமானம் என்கிறார். உண்மைதானே.
பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, இல்லையில்லை பெற்றோர்களைவிட குழந்தைகளுக்கு ஆசிரியர்கள்தான் ரோல்மாடல். ஒரு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அந்த ஆசிரியருக்காக மாணவர்கள் எதையும் செய்வர். அப்படிப்பட்ட ஒரு ஆசிரியராக முத்துக்கண்ணன் அவர்களுக்கு பன்னீர் சார் இருந்திருக்கிறார். அதனால்தான் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் பன்னீர் சார் கட்டுரைக்குள் எட்டிப் பார்க்கிறார். அந்த அளவு பன்னீர் சார் அவரை ஆக்கிரமித்திருக்கிறார்.
கதைகளின் முக்கியத்துவம் இன்றைய ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை. பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. கதைகளைக் கேட்டு வளர்ந்த நாம் நம் குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரமில்லாமல் அல்லது கதை சொல்லத் தெரியாமல் வீடியோவில் கதைகளைக் காண்பித்துக் கொண்டிருக்கிறோம். கதைகள் என்பவை சொல்வதற்கே. அப்போதுதான் மாணவர்களின் கற்பனைத் திறன் மேம்படும். இங்கே வீடியோவில் பார்க்கும் கதைகளால் மாணவர்களின் கற்பனைத் திறன் அற்றுப்போகிறது அல்லது குறைந்துபோகிறது. கதை சொல்லும் ஆசிரியர்களை எப்போதுமே மாணவர்களுக்குப் பிடிக்கும்.
தற்போது அரசே மதுபானக் கடைகளை நடத்தும் அவல நிலையில், குடியால் பாதிக்கப்பட்ட இளம் பிஞ்சுகளின் வேதனைகளைப் பல இடங்களில் ஆசிரியர் தொட்டுச் செல்கிறார். அவற்றை சரி செய்ய நம்மால் என்ன செய்ய இயலும் என்ற ஆற்றாமையே மிஞ்சுகிறது. குறைந்தபட்சம் ஆசிரியர்கள் மனது வைத்தால் அடுத்த தலைமுறையினராவது குடிப் பழக்கத்திலிருந்து மீளுவார்கள் அல்லது குறைவார்கள் என்ற நம்பிக்கையை ஆசிரியர் நடத்திய கையெழுத்து இயக்கம் ஏற்படுத்துகிறது.
எத்தனை வயதானாலும் நமக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் காணும்போது ஒருவித பயம் கலந்த மரியாதை வரவே செய்கிறது. அதுவே ஆசிரியர் மாணவர்க்கான அழகான உறவு முறையாக இருக்கிறது. அந்த உறவு முறையைச் சரியாகப் பயன்படுத்தினால் பல மாணவர்களின் வாழ்வில் நம்மால் மாற்றங்களைக் கொண்டு வர இயலும். ஒவ்வொரு ஆசிரியரும், ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய நூல். மாணவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ள உதவும் சிறு முயற்சி.
மாணவர்களோடு மாணவனாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆசிரியர் முத்துக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.